முதல்வரின் அமீரகப் பயணம்: புதிய முதலீடுகள்… புதிய வேலைவாய்ப்புகள்!

முதல்வரின் அமீரகப் பயணம்: புதிய முதலீடுகள்… புதிய வேலைவாய்ப்புகள்!
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி நகரங்களுக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணமும் அங்குள்ள முன்னணித் தொழில் நிறுவனங்களோடு அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் புதிய முதலீடுகளையும் புதிய வேலைவாய்ப்புகளையும் பெற்றுத்தந்திருக்கின்றன.

அபுதாபியில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர், இந்தப் பயணத்தில் முதற்கட்டமாக ரூ.6,100 கோடி மதிப்பிலான தொழில்கள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, லுலு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கவுள்ள 3 தொழில்கள் 5,000 வேலைகளை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ள நிலையில், அந்நிய நேரடி முதலீடுகளின் வழியாக அதை விரைந்து செய்துமுடிக்க முதல்வர் களத்தில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியாவின் தொழில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் துபாயில் நடத்தப்படும் தொழில் கண்காட்சிகளில் பங்குபெறுவதிலும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர ஆர்வம் காட்டிவருகின்றன. சமீப காலமாக, தென்னிந்திய மாநிலங்கள் இம்முதலீடுகளை ஈர்ப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றன. வணிகரீதியாக மட்டுமின்றி, கலாச்சாரரீதியாகவும் தென்னிந்தியாவுக்கும் ஐக்கிய அமீரகத்துக்கும் இடையே ஒரு பிணைப்பு வலுப்பட்டுவருகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்னால் தொழில் கண்காட்சி தொடங்கியபோது, துபாயின் உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நவராத்திரியையொட்டி தெலங்கானாவின் மலர்த் திருவிழா கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கில் இசையமைத்த பாடலும் அப்போது அங்கு ஒலிபரப்பப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கண்காட்சியில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேச மாநிலம் ரூ.10,350 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் இக்கண்காட்சியில் பங்கேற்றார். மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தமிழ்நாடும் தன்னை இம்முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருப்பது காலத்தே எடுத்த மிகச் சரியான முடிவு.

தமிழ்நாடு முதல்வரின் இப்பயணத்தில் உணவு பதப்படுத்துதல், ஜவுளி, உள்கட்டமைப்பு என்று பல்வேறு தொழில்துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தாலும் மின்சக்தியால் இயங்கும் வாகன உற்பத்தித் தொழில்துறையில் முதலீடுகள் செய்யுமாறு அவர் விடுத்திருக்கும் அழைப்பு மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்டது.

வாகன உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணித் தொழில் நகரமாக விளங்கிவரும் சென்னை, அடுத்த வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதிகரித்துவரும் பெட்ரோலிய எரிபொருட்களின் தேவையைக் குறைப்பதற்காக, உலகம் முழுவதுமே மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம்காட்டப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அத்தகைய ஒரு தொலைநோக்குத் திட்டத்துக்கு முதல்வரின் இந்த நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் வித்திட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in