Published : 29 Mar 2022 06:34 AM
Last Updated : 29 Mar 2022 06:34 AM
மார்ச் 28, 29 தேதிகளில் தேசிய அளவில் நடத்தப்பட்டுவரும் அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் என்பது ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்திய அரசுக்கு அரசியல்ரீதியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு நெருக்கடி. இந்த வேலைநிறுத்தத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன. தவிர, கூட்டமைப்புகளுடன் இணையாத தொழிற்சங்கங்கள், அமைப்புகள் என பாஜகவுக்கு எதிரான அனைவருமே இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் தங்களுக்குள் உருவாக்க முடியாத ஒருங்கிணைப்பை அவற்றைச் சார்ந்து செயல்படும் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளால் உருவாக்கிவிட முடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு உடனடியாக மீள வேண்டியிருக்கும் இக்கட்டான நிலையில், இத்தகைய வேலைநிறுத்தங்களை நடத்துவதைக் கடைசி ஆயுதமாகவே தொழிற்சங்கங்கள் கையாள வேண்டும். மேலும், அத்தொழிற்சங்கங்கள் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளால் நடத்தப்படுபவை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே சொல்லி, மத்திய அரசு இந்த அடையாளப் போராட்டங்களுக்குப் போதிய கவனம் கொடுக்காமலும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுகமான தீர்வுகளைக் காணாமல் தவிர்ப்பதும் கூடாது.
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் வரம்புக்குள் உள்ள தொழிலாளர்களும்கூடச் சில மாநிலங்களில் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஹரியாணாவிலும் சண்டிகரிலும் போக்குவரத்து, மின்சாரத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே, நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் உறவுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும்போது, அத்தியாவசியப் பணியில் உள்ளோரும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருப்பதை ஒரு அபாய எச்சரிக்கையாகவே மத்திய அரசு கொள்ள வேண்டும். ரயில்வே, பாதுகாப்பு ஆகிய முக்கிய துறைகளிலும் சுரங்கப் பணியிலும் எண்ணெய் நிறுவனங்களிலும் தொலைபேசி, தபால் துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
வங்கித் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருப்பது, வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது. வழக்கமாக, தொழில்துறை வேலைநிறுத்தங்களில் விவசாயிகளின் பங்கேற்பு என்பது வெறும் ஆதரவாக மட்டுமே இருக்கும். இம்முறை அவர்களும் ஊரகப் பகுதிகளில் கடையடைப்புகளை நடத்துவதாக அறிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகளும் இவ்வேலை நிறுத்தத்துக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தக் கூடாது, தேசியப் பணமாக்கல் கொள்கையைக் கைவிட வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் பரவலாக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நீண்ட காலமாக விவாதத்தில் இருப்பவை.
அவற்றை ஒரே நாளில் நிறைவேற்றிவிடவும் முடியாது. ஆனால், குறைந்தபட்சம் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இது போன்ற வேலைநிறுத்தங்களை முன்கூட்டியே தவிர்ப்பதற்கு மத்திய அரசு தயங்கக் கூடாது. விவசாயிகள் போராட்டத்தின்போது கடைப்பிடித்த அதே பிடிவாதம், பெருந்தொற்றுக்குப் பிறகான புதிய பொருளாதாரச் சூழலுக்கும் பொருத்தமாக இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT