தலைமை நீதிபதியின் கண்ணீருக்குப் பின்னே...

தலைமை நீதிபதியின் கண்ணீருக்குப் பின்னே...
Updated on
2 min read

உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் உள்ள காலி நீதிபதிப் பணியிடங்களுக்கு 170 பேரை நியமிக்க இரண்டு மாதங்களுக்கு முன்னால் அனுப்பிய பரிந்துரைப் பட்டியல் மீது மத்திய அரசு இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று பொது மேடையில் கண்ணீர் சிந்தியிருக்கிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர். மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த இச்சம்பவம் பெரிய அளவிலான விவாதத்தை எழுப்பியிருக்கிறது.

'இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 10 நீதிபதிகள் என்ற கணக்கில்தான் பதவிகள் இருக்கின்றன. இது குறைந்தபட்சம் 50 ஆக இருக்க வேண்டும்’ என்றது 1987-ல் அறிக்கை தந்த சட்டக் கமிஷன். 2016-ல் இது 10 லட்சம் பேருக்கு 15 ஆக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் சேர்த்து மொத்தம் 3.2 கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. சார்பு நீதிமன்றங்களில் 4,600, உயர் நீதிமன்றங்களில் 462, உச்ச நீதிமன்றத்தில் 6 என்ற எண்ணிக்கையில் நீதிபதிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்துக்கான தாமதங்களுக்குத் தன்னுடைய அமைச்சகம் காரணமில்லை என்றும், நீதிபதிகளின் பின்னணி குறித்து விசாரித்துத் தகவல் தர வேண்டிய காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவும், ஒப்புதல் வழங்க வேண்டிய முதலமைச்சர்களும்கூடக் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சதானந்த கவுடா.

பணிச் சுமையால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நீதிபதிகள், சிறையில் வாடும் கைதிகளின் நிலை ஆகியவற்றைப் பரிசீலித்து விரைந்து செயல்படுமாறு தலைமை நீதிபதி தாக்குர் விடுத்த வேண்டுகோள் உண்மையில் பரிசீலிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், வழக்குகள் தேக்கத்துக்கு மத்திய அரசு அல்லது மத்திய சட்ட அமைச்சகம் மட்டும் காரணம் என்றும் சொல்லிவிட முடியாது.

எந்த வழக்கையும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற காலவரையறையே கிடையாது. நீதிமன்றப் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அழைப்பாணைகள் அனுப்பவே கால தாமதங்கள் ஆகின்றன. இதனால் விசாரணைகள் தள்ளிவைக்கப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது அவசியம். லோக் அதாலத், நடுவர் மன்றங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். ஓய்வுபெற்ற நீதிபதிகளை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் மீண்டும் பணியில் அமர்த்தி தேங்கியுள்ள வழக்குகளை விசாரிக்கலாம். நீதிமன்ற நடவடிக்கைகளைக் கணினி மயமாக்குவதன் மூலம் காலதாமதத்தைத் தவிர்க்கலாம்.

இந்த சர்ச்சை எழுந்ததை அடுத்து, நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தொடர்பாகவும் விவாதம் எழுந்திருக்கிறது. அதேசமயம், கோடை விடுமுறையிலும் அவசர வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்று சமீபத்தில் தெரிவித்த தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், அதற்கான சட்டத்தை உருவாக்குமாறு வழக்கறிஞர் சங்கத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதுபோன்ற முன்னெடுப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன.

வழக்கு விசாரணை தாமதமாவதால் தங்கள் வாழ்க்கையையே பறிகொடுத்து நிற்பவர்கள் ஏராளம். எல்லாவற்றையும் தாண்டி, தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று மக்கள் உறுதியாக நம்பி அணுகுவது நீதிமன்றங்களைத்தான். எனவே, இவ்விஷயத்தில் யார் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று வாதம் செய்வதைத் தவிர்த்து, நாட்டின் குடிமக்களுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய சட்ட அமைச்சகமும், உச்ச நீதிமன்றமும் இணைந்து செயலாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in