Published : 25 Mar 2022 06:43 AM
Last Updated : 25 Mar 2022 06:43 AM

மத்திய பல்கலைக்கழகங்களுக்குப்பொது நுழைவுத் தேர்வு: புதிதாய் ஒரு விவாதம்!

மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அனைத்து இளநிலைப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பு கல்வித் துறையில் மட்டுமின்றி அரசியலிலும் விவாதத்துக்குரிய ஒரு பொருளாக மாறியிருக்கிறது. கடந்த ஆண்டே இத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டாலும், பெருந்தொற்றுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் இந்த அறிவிப்புதான் ஒரு விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது.

இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மத்திய பல்கலைக்கழகங்களில் இனி சேர்க்கை நடைபெறும். பன்னிரண்டாம் வகுப்பில் பெறுகின்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. பள்ளி மாணவர்களிடம் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் குறித்த மன அழுத்தத்தை இது குறைக்கும் என்ற காரணத்தின் அடிப்படையில் இது வரவேற்கப்பட்டாலும், பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் இத்தேர்வில் வெற்றிபெற முடியாவிட்டால், மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை இழப்பது சரியாகுமா என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. பெருந்தொற்றுக்குப் பிறகு, கடந்த சில மாதங்களாகத்தான் பள்ளி மாணவர்கள் வழக்கமான வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், இந்நுழைவுத் தேர்வை உடனடியாக வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டிய அவசரம் குறித்தும் கேள்வியெழுப்பப்படுகிறது. தற்போதைய அறிவிப்பின்படி, ஏப்ரல் மாதத்தில் பொது நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.

பிஹெச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கான மாணவர்களையும்கூட அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் தேர்வுசெய்யாமல் பல்கலைக்கழக மானியக் குழுவே முடிவுசெய்யும் என்ற அறிவிப்பும்கூடச் சமீபத்தில் வெளிவந்துள்ளது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரத்துக்கு இது எதிரானது என்ற சட்டரீதியான பார்வையைக் காட்டிலும், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தன்னளவில் தனித்துவமான கல்வி மற்றும் ஆராய்ச்சி முறைமைகளைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன என்ற கல்வியியல்ரீதியிலான பார்வையும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும். தற்போதைக்குப் பொது நுழைவுத் தேர்வு 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படும் வெவ்வேறு சேர்க்கை முறைகள் பொதுவான ஓர் முறையின்கீழ் கொண்டுவரப்படுகின்றன. மாநில அரசாலும் தனியாராலும் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை விரும்பினால், இந்தப் பொது நுழைவுத் தேர்வு முறையைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அனுமதி இனிவரும் காலத்திலும் தொடரும் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. படிப்படியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், எந்தவொரு பல்கலைக்கழகம், கல்லூரியிலும் இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீட்டையும் வழிநடத்தலையும் வரம்பு கடந்ததாகப் பார்க்கும் மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் மாநில அரசால் நடத்தப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்ற வேண்டியதன் பொறுப்பையும் தட்டிக்கழித்துவிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x