Published : 23 Mar 2022 06:24 AM
Last Updated : 23 Mar 2022 06:24 AM
கடந்த மார்ச் 16-ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் 12 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. 2008, 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மார்ச் 15 நிலவரப்படி, தடுப்பூசி போடுவதற்குரிய வயதை அடைந்தவர்களில் சுமார் 75% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் சுமார் 46% பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன. அவர்களில் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பதின்வயதினரில் 5.5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் தவணையையும் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், 12-14 வயதினருக்கும் தற்போது தடுப்பூசியின் பாதுகாப்பு வளையம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கியதாக இது விரிவுபெற வேண்டும்.
இந்தியாவில் வயதுவந்தோருக்கான கரோனா தடுப்பூசிகளாக கோவிஷீல்டு, கோவாக்ஸின், கோர்பேவேக்ஸ் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 15-18 வயதினருக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்ஸின் மட்டுமே போடப்பட்டுவந்தது. மார்ச் 16 முதல் 12-14 வயதினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ள தடுப்பூசித் தவணைகளில் முதன்முறையாக கோர்பேவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
ஹைதராபாதைச் சேர்ந்த ‘பயாலஜிகல் இ’ நிறுவனத்தால் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுவருகிறது. முற்றிலும் இந்தியாவிலேயே மேம்படுத்தப்பட்ட உயிரிதொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தடுப்பூசி இது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போடப்பட வேண்டியது. கடந்த பிப்ரவரி 21 அன்று இதற்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. 12 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கரோனாவின் மூன்றாவது அலையை முன்கூட்டிய திட்டமிடலுடன் இந்தியா வெற்றிகரமாகக் கடந்துவிட்டாலும் உலகின் சில பகுதிகளில் இன்னும் கரோனாவின் பரவல் கவலைக்குரியதாக உள்ளது. சீனாவிலும் தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கரோனா தொற்று பரவிவரும் வேகம் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவின் உருமாறிய வடிவங்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில், இந்தியாவில் உரிய வயதடைந்தவர்கள் அனைவரும் தடுப்பூசிப் பாதுகாப்பைப் பெற வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசியின் வாயிலாக கரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்திவரும் நிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்குள் பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் அனைவரையும் விரைவில் தடுப்பூசிப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். அதற்கான ஆராய்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT