Published : 22 Mar 2022 06:17 AM
Last Updated : 22 Mar 2022 06:17 AM
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்வாணைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சிகளைக் கண்டித்து, தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தமிழ்நாட்டுக்கு விரோதமாகவே இருக்கின்றன என்பதை அவர் தனது தீர்மானத்துக்கு முன்பாக சுட்டிக்காட்டினார். அதுபோல, தமிழ்நாட்டுக் கட்சிகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து, இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற நீர்வளத் துறை அமைச்சரின் கோரிக்கை, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாகச் செயல்வடிவம் கண்டுள்ளது.
நதிநீர்ப் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு மறுப்பது, கூட்டாட்சித் தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. அம்மாநில அரசு, நிதிநிலை அறிக்கையில் மேகேதாட்டுக்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, தமிழ்நாட்டு மக்களிடம் கடும் அதிருப்தியையும் எழுப்பியிருக்கிறது. மத்திய அரசின் அணுகுமுறை கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறதா என்ற சந்தேகமும் தீவிரப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவதோடு, சட்டரீதியான நடவடிக்கைக்கும் தமிழ்நாடு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்திருக்கும் உறுதிமொழி நம்பிக்கை அளிக்கிறது.
அதிமுகவின் சார்பில் இத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, காவிரி நீர் உரிமையை நிலைநிறுத்துவதற்காக எம்ஜிஆர் தொடங்கி அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கைகளைப் பட்டியலிட்டதோடு, மத்தியில் பாஜக தலைமையிலும் காங்கிரஸ் தலைமையிலும் அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக இவ்விஷயத்தில் தீர்வு காண முயலவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
இத்தீர்மானத்துக்கு ஆதரவைத் தெரிவித்துள்ள பாஜக, இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் பேசுவோம் என்று தெரிவித்துள்ளது. மத்தியிலும் கர்நாடகத்திலும் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் கருத்தொருமித்த குரலைப் பிரதிபலிக்க வேண்டிய பெருங்கடமை தமிழ்நாடு பாஜகவுக்கு உண்டு. மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று பாமக உறுப்பினர் கோரியிருப்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சிக்கல்கள் தீவிரமாகிறபோது, தவிர்க்க இயலாமல் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்துவது என்ற வழக்கத்தைத் தவிர்த்து, இச்சிக்கல்களைக் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி விவாதிப்பதும் கட்சிகளுக்கு இடையே கருத்தொருமிப்பை நிரந்தரமாகப் பேணுவதும் அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதுபோல, காவிரிப் படுகை விவசாயிகள் அச்சத்தில் இருக்கிறார்கள்; இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. நீர் உரிமையைப் பாதுகாக்கத் தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரமிது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT