அக்கறையை மட்டுமே வெளிப்படுத்தும் நிதிநிலை அறிக்கைகள்

அக்கறையை மட்டுமே வெளிப்படுத்தும் நிதிநிலை அறிக்கைகள்
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் நெகிழ்வான பார்வை வேண்டும் என்று உலகெங்கும் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளதையே தனது சாதனையாக முன்னிறுத்துகிறது, அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை. வழக்கமான அரசு செலவினங்களின் தொகுப்பாகவே பெரிதும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது என்றபோதும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்குச் சமாதானமாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் உண்டு.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு இந்த உதவித்தொகை மறுக்கப்படக் கூடாது. முக்கியமாக, பெருந்தொற்றுக் காலத்தில் உயர்கல்வி பயில விரும்பும் இருபால் மாணவர்களுக்கும் கல்விக்கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே உடனடித் தேவை. அரசு, தனியார் துறைகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் இந்த பட்ஜெட் முழுமையாக நிறைவேற்றவில்லை. பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களிலாவது இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரையில், அதன் ஒவ்வொரு வார்த்தையும் விவசாயிகளின் ஆழ்மனக் காயங்களுக்கு மயிலிறகால் மருந்து தடவ முயல்கிறது. திமுக ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது வேளாண் பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எத்தனை திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, நீண்ட காலத் திட்டங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகக் காத்திருப்பவை எத்தனை என்ற விவரங்களோடு இடம்பெற்றுள்ளது ஒரு நல்ல முன்னுதாரணத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது.

இத்தகைய அணுகுமுறையைப் பொது நிதிநிலை அறிக்கையிலும் இயன்றவரை கையாளுவது வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும். ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எழுதிய கட்டுரைகளில் வலியுறுத்தப்பட்ட பயிர்வாரி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்துக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதுடன் வேளாண் பணிகளுக்குச் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவதையும் அரசு ஊக்கப்படுத்திவருவது நடைமுறை எதார்த்தத்தையும் எதிர்காலத்துக்கான தொலைநோக்குப் பார்வையையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.

பயிர்க் காப்பீட்டு மானியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, மாநில அரசே பயிர்க் காப்பீட்டு நிறுவனம் தொடங்குவதைப் பற்றியும் பரிசீலிக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள விவசாயத் தொழிற்பேட்டை வெகுவிரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். உழவர் சந்தை சீரமைப்பும் மாநில எல்லையோரச் சந்தைகளும் பாராட்டுக்குரியவை. நிதிநிலை அறிக்கைகளின் வாயிலாக அரசிடமிருந்து விவசாயிகள் இன்னும் நிறையவே எதிர்பார்த்தனர். அவை இனிவரும் ஆண்டுகளிலேனும் நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in