Published : 18 Mar 2022 06:02 AM
Last Updated : 18 Mar 2022 06:02 AM
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், உத்தராகண்டில் பாஜகவுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடப் பொய்த்துவிட்டது. மத்தியில் மட்டுமின்றி, பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக தன்னை வலுவான கட்சியாக உறுதிப்படுத்திக்கொண்டுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியும் அதுபோல வலிமையோடு விளங்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தில் ஆரோக்கியமான அரசியல் போக்கை உருவாக்கும். ஆனால், காங்கிரஸ் அடுத்தடுத்துத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்துவரும் நிலையிலும் தனது நிலப்பிரபுத்துவ மனோபாவத்திலிருந்து விடுபடுவதாகத் தெரியவில்லை.
காங்கிரஸின் தோல்விக்கு முக்கியக் காரணம், தத்துவார்த்த அளவிலும் அமைப்புரீதியிலும் கடந்த சில ஆண்டுகளாக அது அடைந்துவரும் பின்னடைவு. அடித்தளத்தில் அது மக்களிடமிருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கைகள் என்று பெரியளவில் எதுவும் அங்கு நடக்கவில்லை. உள்ளூர் அளவிலான தலைவர்களை நம்பியே காங்கிரஸின் அரசியல் நடந்துகொண்டிருக்கிறது.
சித்தாந்தரீதியில் அத்தலைவர்களின் ஈடுபாடும் திருப்திகரமாக இல்லை.மதச்சார்பின்மை என்ற ஒரே கொள்கைதான் காங்கிரஸுக்கான தேவையை இன்னும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் குறித்த காங்கிரஸின் கொள்கைகளில் எண்பதுகளுக்குப் பிறகு எந்த மாற்றமும் நிகழவில்லை. இத்தனைக்கும் அரசியலிலும் பொருளியலிலும் நிபுணத்துவம் வாய்ந்த பல தலைவர்களைக் கொண்ட கட்சி அது. அவர்களின் வார்த்தைகளுக்குக் கட்சித் தலைமை காதுகொடுப்பதில்லை என்பதே இன்றைய அதன் சரிவுக்குக் காரணமாகியிருக்கிறது.
காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டுமெனில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் இன்னும் தீவிரமாக அரசியலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல், கட்சியை ஜனநாயக முறையில் இயங்க அனுமதித்து அவர்கள் விலகிநிற்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்துள்ளன. தற்போது சோனியா காந்தி கட்சியின் செயல்தலைவராகவும் பிரியங்கா காந்தி பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும் பொறுப்பில் உள்ளனர். ராகுல் காந்தி பொறுப்பு எதையும் வகிக்கவில்லை.
வலதுசாரி அரசியலுக்கு எதிராகச் சித்தாந்தரீதியில் தீவிரமாகச் செயல்பட வேண்டிய ஒரு கட்சி, முற்றிலும் குடும்ப உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், நேரு குடும்பத்தினர் தேச விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து அவர்களின் தலைமையை ஏற்பதே கட்சியை வலுப்படுத்தும் என்ற பார்வையும் நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமையேற்பது என்பதல்ல தற்போதைய சிக்கல். யாராவது தலைமையேற்று, தாம் ஏற்ற பொறுப்பின் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான். தேர்தல் முடிவுக்குப் பிறகு, கூடிக் கலைந்திருக்கும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அதற்கான சூழல் உடனடியாக உருவாகும் என்பதற்கான சமிக்ஞைகள் தெரியவில்லை. காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு கட்சித் தலைமைக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனாலும், அத்தலைவர்களிலும் பெரும்பாலானவர்கள் மக்களிடமிருந்து வெகுதொலைவில்தான் நிற்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT