ஒரே நேரத்தில் தேர்தல்: ஒருமித்த முடிவு தேவை

ஒரே நேரத்தில் தேர்தல்: ஒருமித்த முடிவு தேவை
Updated on
2 min read

நாடாளுமன்றம், சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு யோசித்துவருகிறது. கடந்த பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், இதுதொடர்பாகப் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் குழு இந்த யோசனை தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனையைத் தொடங்கியிருக்கிறது.

பாஜகவைப் பொறுத்தவரை இந்த யோசனை புதிதல்ல. இதற்கு முன்னர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்துக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்று 2009, 2014 மக்களவைத் தேர்தல்களின்போது தேர்தல் அறிக்கைகளில் பாஜக உறுதியளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன்மூலம் தேர்தல் செலவுகளைக் குறைக்க முடியும் என்றும், மாநில அரசுகளின் ஆட்சிக்காலம் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதை உறுதிசெய்ய முடியும் என்றும் பாஜக அரசு கருதுகிறது. அந்த அடிப்படையில் பார்த்தால், இது நல்ல யோசனை என்றே கருதலாம்.

சுதந்திர இந்தியாவில் 1951-52-ல் நடத்தப்பட்ட முதல் தேர்தல் தொடங்கி, தொடர்ந்து 1957, 1962 மற்றும் 1967-ல் நடந்த தேர்தல்களில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப் பேரவைக்கும் சேர்த்தே தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் சில மாநில அரசுகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறையில் மாற்றம் வந்தது. 1970-ல் மக்களவையே கலைக்கப்பட்டு, 1971-ல் தேர்தல் நடத்தப்பட்டது. சட்டப்பிரிவு 352-ன் கீழ் ஐந்தாவது மக்களவையின் காலம் 1977 வரை நீட்டிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளிடம் இந்த யோசனை போதிய வரவேற்பைப் பெறவில்லை. வரவேற்கும் கட்சிகளும் இதன் நடைமுறைச் சாத்தியம் குறித்துச் சந்தேகம் எழுப்பியிருக்கின்றன. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் இந்த யோசனையை நடைமுறைப்படுத்த முடியாது என்று நிராகரித்திருக்கின்றன. அதிமுக, அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் இந்த யோசனையை வரவேற்றிருக்கின்றன. இது நல்ல யோசனை என்று குறிப்பிட்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இதிலிருக்கும் நடைமுறைச் சிக்கல்களின் அடிப்படையில் சந்தேகம் தெரிவித்திருக்கிறது.

ஒரு அரசு பெரும்பான்மையை இழக்கும் தருணத்தில், பிற கட்சிகளால் போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் காட்ட முடியாதபட்சத்தில், அந்த மாநிலத்துக்கு நீண்ட நாட்களுக்குத் தேர்தல் நடத்தாமல் முடக்கிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஐந்து ஆண்டுகளுக்கு நிலையாக ஆட்சிசெய்தால்தான் மக்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்ய வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போது பாஜக ஆட்சியிலும் மாநில அரசுகள் கலைக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்திய உதாரணம், உத்தராகண்ட் மாநிலம். அதேசமயம், ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சி, எப்போது வேண்டுமானாலும் தனது அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் மக்களிடம் சென்று ஆதரவைக் கோரும் உரிமையை இது தடை செய்யும்.

பாஜக முன்வைத்திருக்கும் இந்த யோசனை நல்லதாகத் தோன்றினாலும், அதை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அரசியல் சூழல்கள் சரிசெய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் வாக்காளர்களின் கருத்தை அறிந்துகொள்ள விரிவான ஆய்வும் தேவை. இந்த விஷயங்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்ட பின்னர், மத்திய அரசின் இந்த யோசனையைப் பரிசீலிக்கலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in