பொம்மை வழக்கு தீர்ப்புக்கும் அப்பால்!

பொம்மை வழக்கு தீர்ப்புக்கும் அப்பால்!
Updated on
2 min read

உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்று, உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டது. இதனால், காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத் மீண்டும் முன்னாள் முதல்வர் என்ற அடைமொழிக்கு மாற நேர்ந்திருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னால் பதவியிலிருந்து நீக்குவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது. 1994-ல் கர்நாடகத்தில் எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான ஜனதா அரசை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பதவி நீக்கம் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் விளக்கமும் இன்றைக்கும் வழிகாட்டிகளாக இருக்கின்றன. என்ன ஆனாலும் சரி, மாநில அரசுக்குள்ள பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகையோ வேறு இடங்களோ அல்ல, சட்டப்பேரவைதான் என்று திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியது அந்தத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பின் தன்மை காரணமாகவே அதன் பிறகு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசுகள் தயங்கியே வந்தன. ஆனால், சமீபத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த அரசியல் விளையாட்டை மீண்டும் துவக்கியிருக்கிறது.

உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் மூன்று முக்கிய அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்துத்தான் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது. மாநிலத்துக்கான செலவு அனுமதி கோரிக்கை மசோதாவை, குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றிவிட்டதாகக் கூறியது ராவத் தலைமையிலான அரசு. எதிர்க்கட்சிகள் வாக்குச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியபோது அதை நிராகரித்தது. ஆனால், அந்த மசோதாவை மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. அடுத்ததாக, ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்தி எம்எல்ஏக்களைப் பதவி நீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அவையில் அறிவித்தார். அதாவது, அரசுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்த சட்டப்பேரவை உறுப்பினர்களை அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தகுதி நீக்கம் செய்துவிட்டார். அதன் பிறகு நடந்த மற்றொரு சம்பவத்தில், அதிருப்தியாளர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டுவர ஹரீஷ் ராவத் யாருடனோ பேரம் பேசியதாக ஒரு காணொலிக் காட்சி, ஊடகங்களில் பரவியது.

இந்த மூன்றுஅம்சங்களையுமே பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த மூன்றையுமே ஏற்க முடியாவிட்டாலும் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கருத ஏதும் இல்லை என்று சரியாகவே முடிவெடுத்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆராய்ந்து என்ன கருத்தைத் தெரிவிக்கும் என்பது தெரியாது. ஆனால், இப்போது நடக்கும் அரசியல் நாடகங்களைப் பார்க்கும்போது, பொம்மை தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பின்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையும் வழிகாட்டு நெறிகளும்கூடப் போதாது என்றே தோன்றுகிறது. காரணம், வேறு சில அம்சங்களும் இதில் சேர்ந்துவிட்டன.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆளுநர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கில் பொம்மை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்போதோ ஆளும் கட்சிக்குள் தன்னை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை காரணமாக சட்டப்பேரவையில் தனக்குப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு நிச்சயம் இருக்காது என்ற நிலை வந்தாலும்கூடப் பதவியில் தொடர்ந்து ஒட்டிக்கொள்ள முதலமைச்சர்கள் விரும்புகின்றனர். அதிருப்தியாளர்கள் தனக்கு எதிராகச் செயல்பட்டுவிடாமலிருக்க, சட்டப்பேரவைத் தலைவரின் உதவியோடு அவர்களுடைய பதவிகளைப் பறிக்கக்கூடத் தயாராக இருக்கின்றனர். மாநில ஆளுநர் எப்படி நடுநிலை தவறாமல் செயல்பட்டாக வேண்டுமோ அதே போல சட்டப் பேரவைத் தலைவர்களும் தாங்கள் பதவிக்கு உரிய கண்ணியத்துடன் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக அவை உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கத் துணை போனால் அது ஜனநாயகத்தைத்தான் வலுவிழக்கச் செய்யும். கட்சித் தாவல் தடைச் சட்டத்தை ஆளும் மாநில அரசுக்கு ஆதரவாக மட்டும் செயல்படுத்த பேரவைத் தலைவர்கள் துணை போகக்கூடாது. (இந்த சுயநல நடவடிக்கையில் பாஜக ஒன்றும் விதிவிலக்கல்ல. 2010-ல் 16 அதிருப்தி உறுப்பினர்களின் பதவியைப் பறித்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொண்டார் அப்போதைய கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.) அரசியல் உள்நோக்கத்துடன் 1980-களில் மாநில ஆளுநர்கள் செயல்பட்டார்கள் என்றால், சமீப காலமாக சட்டப்பேரவைத் தலைவர்கள் அச்செயலில் ஈடுபடுகின்றனர்.

நம்முடைய அரசியல் சூழலே வேறுவிதமாக மாறிவருகிறது. ஆளுநர்கள் மத்திய அரசுக்குச் சாதகமாக நடந்தால், சட்டப் பேரவைத் தலைவர்கள் அதையே மாநில அரசுகளுக்குச் சாதகமாக செய்துதரத் தயாராகிவிட்டார்கள். மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டாகச் செயல்பட்டு கூட்டரசுத் தத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்று அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் விரும்பியிருந்தாலும், சுயநல நோக்கிலான அரசியல் நடவடிக்கைகளே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. பொம்மை வழக்கில் அளித்த தீர்ப்பும் ஏற்படுத்திய முன்னுதாரணங்களும் இப்போது கட்டவிழ்ந்துவிட்டன. புதிய சூழலுக்கு ஏற்ப புதிய நடைமுறை அவசியப்படுகிறது. ஆளும் கட்சியின் நாவசைவுக்கு ஏற்பச் செயல்படும் ஆளுநர்களை மட்டுமல்ல - பேரவைத் தலைவர்களையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in