Published : 15 Mar 2022 05:50 AM
Last Updated : 15 Mar 2022 05:50 AM

டிஜிட்டல் முறைக்கு மாறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

மக்களே தாமாக முன்வந்து தகவல்களை அளிக்கும்வகையிலும் அத்தகவல்களை டிஜிட்டல் வடிவத்தில் சேகரித்துப் பாதுகாக்கும்வகையிலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தங்களைச் செய்துள்ளது. 2020-லேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுவிட்டாலும், கடந்த வாரம்தான் அரசிதழில் இத்திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திருத்தங்களால், மக்களால் தங்களைப் பற்றிய விவரங்களை இணையம் வழியாக உரிய படிவங்களில் நிரப்பி சமர்ப்பிக்க முடியும். கரோனா பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து நடத்தி முடிப்பதற்கு இத்திருத்தங்கள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி, 2020 ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரையில் வீடுவாரி கணக்கெடுப்பை நடத்தவும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டாம் கட்டமாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிப்ரவரி 2021-ல் தொடங்கவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு 2019 மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால், 2020 ஜனவரியில் பெருந்தொற்று தீவிரமாகப் பரவ ஆரம்பித்த நிலையில் இக்கணக்கெடுப்புகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தவிருப்பதாக 2021 ஜூலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. தகவல்களைச் சேகரிப்பதற்காக செல்பேசிச் செயலியொன்றை மேம்படுத்தவிருப்பதாகவும் கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க உதவியாக இணையதளம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு நடைமுறையில் இருந்துவந்த, வீடுதோறும் சென்று தகவல்களைச் சேகரிக்கும் முறையும் இப்போது பின்பற்றப்படவுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் 30 லட்சம் அரசு ஊழியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் 650 முதல் 800 வரையிலானவர்களைப் பற்றிய விவரங்களை நேரடியாகவோ இணைய வழியிலோ சேகரிப்பார்கள். என்றாலும், மக்கள் தாங்களே முன்வந்து தகவல்களை அளிப்பதற்கான வாய்ப்பும் அனுமதிக்கப்படுகிறது.

கடந்த வாரமே தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான இயக்குநர்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. எனினும், பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு வானொலி, சுவரொட்டிகள் ஆகியவற்றுடன் அச்சு ஊடகம், மின் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

குடியிருப்புகளின் நிலை, அதில் உள்ள வசதிகள் பற்றிய வீடுவாரி கணக்கெடுப்பும் மக்கள்தொகை, மதம், பட்டியல் சாதிகள், பழங்குடிகள், மொழி, கல்வி, பொருளாதார நடவடிக்கைகள், இடப்பெயர்வு, குழந்தைப் பிறப்பு வீதம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை உள்ளடக்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அளிக்கும் தகவல்கள் ஆட்சி நிர்வாகத்திலும் சமூகநலத் திட்டங்களைத் திட்டமிடுவதிலும் முக்கியப் பங்குவகிப்பவை. தற்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட விவரங்கள் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வெளியாகும்பட்சத்தில், தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாகவும் அமையக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x