அலட்சியத்தால் அழிந்த அருங்காட்சியகம்!

அலட்சியத்தால் அழிந்த அருங்காட்சியகம்!
Updated on
2 min read

டெல்லி தேசிய அருங்காட்சியகம் தீ விபத்தில் எரிந்து நாசமாகியிருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்தியாவின் பண்டைய பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்த அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. இந்திய தொழில், வர்த்தக சபைக்குச் சொந்தமான 6 மாடிக் கட்டிடத்தின் 3 தளங்களில் அருங்காட்சியகம் இயங்கிவந்தது. விபத்து ஏற்பட்டபோது, தானாகவே தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைக்கும் இயந்திரங்கள் உரிய நேரத்தில் செயல்படாததால் தீ பெரிய அளவில் பரவியதைத் தடுக்க முடியவில்லை என்று தகவல்கள் சொல்கின்றன. தீ பரவிய பிறகு, அங்கிருந்த தண்ணீர்த் தொட்டியிலிருந்து நீரை எடுக்க முடியாமல் மின்மோட்டாரும் பழுதாகியிருந்தது. 35 தீயணைப்பு இயந்திரங்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தன என்பதிலிருந்தே தீயின் வேகத்தை உணரலாம்.

டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் 1949-ல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது. கலைப் பொருட்களின் எண்ணிக்கையும் காட்சியகத்தின் பிரிவுகளும் அதிகரித்ததால், 1978-ல் இப்போதைய இடத்துக்குக் குடிபெயர்ந்தது. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான அரிய கலைப் பொருட்கள், விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்தும் நன்கு பாடம் செய்யப்பட்டு விளக்கக் குறிப்புகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கி.மு. 2700-ஐச் சேர்ந்த சுடுமண் பொருட்கள், விஜயநகர சாம்ராஜ்யத்தின் கலைப் பொக்கிஷங்கள், குப்தர்களின் கலைப்பொருட்கள், சிந்துச் சமவெளி பள்ளத்தாக்கில் கிடைத்தவை, முகலாயர் காலத்தில் படைக்கப்பட்டவை என்று பலவும் இருந்தன. மொகஞ்சதாரோ நடன மங்கையின் சிலை, பழங்குடி மக்களின் அணிகலன்கள், அவர்கள் வரைந்த குறு ஓவியங்கள், நாட்டின் பல பகுதிகளில் முதலில் கிடைத்த அரிய சிற்பங்கள், இந்திய நிலப்பரப்பில் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படும் டைனோசரஸின் எலும்புக்கூடு என்று மொத்தம் 2 லட்சம் அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருந்தன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரில் பாடம் படிக்கப் பேருதவி செய்துவந்தவை இவை. வரலாற்றின் நேரடிச் சாட்சியங்களாக நின்ற அத்தனைப் பொருட்களும் 4 மணி நேரத்துக்குள் நாசமாகிவிட்டன. அந்த இடத்தைத் தீவிரமாக ஆராய்ந்தால்தான் எந்தப் பொருள் எஞ்சியது என்று அறிய முடியும்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள இதர 34 அருங்காட்சியகங்களிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளன என்று ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருக்கிறார் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். ஆனால், இதுபோன்ற மாபெரும் சேதத்தைத் தவிர்க்க முடியாதது ஏன் என்ற கேள்வி, அனைவர் மனதிலும் எழுந்திருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தின் கலையரங்கை மட்டுமே தீயணைப்புத் துறை சோதித்துச் சான்று வழங்கியதாகத் தெரிகிறது. அருங்காட்சியகத்தை ஏன் சோதிக்கவில்லை என்பது புரியாத புதிர்.

பழங்காலப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கோ, மக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ கிடையாது. அதன் உச்சபட்ச வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் இத்தகைய அரிய கலைப் பொருட்களை உருவாக்க முடியாது. அருங்காட்சியகங்களை மேலும் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும். இவற்றுக்காகத் தனிக் கட்டிடங்களை அரசு செலவில் கட்டினாலும் தகும். அருங்காட்சியகங்கள் கடந்த காலத்தின் சாட்சிகள் மட்டுமல்ல, வருங்காலத்தின் வழிகாட்டிகள். ஆட்சியாளர்கள் இவற்றின் பெருமையை உணர்ந்து பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். இல்லையேல், வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in