Published : 09 Mar 2022 06:41 AM
Last Updated : 09 Mar 2022 06:41 AM
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சமர்ப்பித்திருக்கும் நிதிநிலை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது, தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் அரசு ஊழியர்களிடத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று என்பதால், வரவிருக்கும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்ட அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்குப் பிறகு குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியமும் பணிக்கொடை போன்ற பயன்களும் அளிக்கப்பட்டன. 2004 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தப் பயன்கள் நிறுத்தப்பட்டன. எந்தவொரு ஊழியருக்கும் சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அரசுகளே அந்தப் பொறுப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வது, தனியார் துறையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாத நிலையை எளிதில் உருவாக்கிவிடும்.
பெருந்தொற்று காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் சூழலில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் தொய்வை ஏற்படுத்தாதா என்ற கேள்வி இயல்பானது. பழைய ஓய்வூதியத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் நிதிச் சுமையைத் தாம் தெளிவாகவே உணர்ந்துள்ளதாகவும் இதனால் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் எந்தச் சுணக்கமும் ஏற்படாது என்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது சமீபத்திய கட்டுரையில் தெரிவித்துள்ளார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசுத் துறையில் பணியாற்றிய ஓர் ஊழியருக்கு அவரது ஓய்வுக் காலம் என்பது ஓய்வூதியத்தை நம்பியே இருக்க முடியும்; நல்லதொரு ஆட்சி நிர்வாகத்துக்குத் தன் வாழ்வின் பெரும் பகுதியை அளித்த ஊழியரின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தின் கடமை என்ற விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, அடுத்து வரும் ஆண்டில் புதிதாக ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை நாட்களை 125 ஆக உயர்த்தியிருப்பதோடு நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.800 கோடியும் ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டில் இத்திட்டத்துக்குக் கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு பரீட்சார்த்த நிலையில் உள்ளது. அடுத்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ராஜஸ்தான் முதல்வர் இத்திட்டங்களை அறிவிப்பதில் அவசரம் காட்டியிருக்கலாம். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களும் முடிந்துவிட்டதால், உடனடி அழுத்தங்கள் எதுவும் இல்லை என்றபோதும், ராஜஸ்தானின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிலும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT