Published : 03 Mar 2022 06:29 AM
Last Updated : 03 Mar 2022 06:29 AM

நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எப்போது?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அடுத்துவரும் 2022-23 நிதியாண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையில், நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஊரகங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளியவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இதுவரையில் இல்லை. பெருந்தொற்றின் காரணமாக உருவான பொருளாதார நெருக்கடியை ஊரகங்கள், நகரங்கள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருமே எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடைபாதைகளில் கடைகளை நடத்திவந்த சிறுவியாபாரிகள், உணவகங்களில் பணியாற்றியவர்கள் போன்ற நகர்ப்புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும்நோக்கத்தில், ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் அசோக் கெலாட். இத்திட்டத்தால், அடுத்துவரும் நிதியாண்டில் கூடுதலாக ரூ.800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்படவிருக்கிறது என்பது குறித்து இன்னும் விரிவான விவரங்கள் வெளியாகவில்லை.

நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான தேவை முன்பு எப்போதைக் காட்டிலும் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்துள்ளது. தொழிலாளர் நலம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு, பெருந்தொற்றின் காரணமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவது குறித்து அளித்துள்ள அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் கவனம், நகர்ப்புற ஏழைகளின் மீது காட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. நகர்ப்புறங்களில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், நீர்நிலைகள், குறுக்குச் சாலைகள் உள்ளிட்ட பணிகளில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று நிலைக் குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது. ஊரகப் பகுதிகளைப் போலவே நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பைச் சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.

பெருந்தொற்றின் காரணமாக உருவான பாதிப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, கடந்த 2020-ல் அளித்த அறிக்கையிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை இடம்பெற்றிருந்தது. ஆனாலும், இதுவரையில் தமிழ்நாட்டில் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஊரகங்களைப் போல, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களைக் கண்டறிவது எளிதானதாகவும் இருக்காது. அதுபோலவே, ஊரக வேலைவாய்ப்பு என்பது பெரிதும் தொழில்திறனற்ற பணிகளாகவே இருக்கின்றன.

நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, தொழில்திறன் உள்ள பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று மேம்பாட்டுப் பொருளியல் அறிஞரான ழீன் தெரசே தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான அவர் ‘பரவலாக்கப்பட்ட நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி’ (டூயட்) என்ற திட்டத்துக்கான மாதிரியை முன்மொழிந்துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும் ழீன் தெரசே தற்போது அங்கம்வகிக்கிறார். ராஜஸ்தான் போலவே, தமிழ்நாட்டிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான தேவை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x