Published : 02 Mar 2022 07:27 AM
Last Updated : 02 Mar 2022 07:27 AM
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் அதில் பங்கேற்ற தலைவர்களின் உரைகளும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘திராவிடவியல் ஆட்சி முறை’ என்ற முழக்கத்தோடு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் வகையில் அரசமைப்பு திருத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவ்விழாவில் முன்வைத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர்.
இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று விழாவில் கலந்துகொண்ட மற்ற மாநிலங்களின் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விழா, தேசிய அளவில் பாஜக அல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. காரணம், 2024-ல் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பே வருகின்ற ஜூன் அல்லது ஜூலையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக அல்லாத கட்சிகளிடம் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், பாஜக தனது கைவசம் உள்ள இடங்களில் கணிசமானவற்றை இழக்க நேரும்; அவ்வாறு நடந்தால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கும்; அது குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
எனவே, தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன. பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு இடையேயான கூட்டணி உறுதியாகும்பட்சத்தில், அவர்கள் விரும்பியவாறே தேர்தல் முடிவுகளும் அமைந்தால் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளர் முன்னிறுத்தப்படலாம். அந்தப் போட்டியை எதிர்கொள்ளும்வகையில், பாஜகவும் தனது சார்பில் பிரபலமான ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டியிருக்கும்.
இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சு கடந்த வாரமே எழுந்து ஓய்ந்துள்ளது. தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் அவரைச் சந்தித்தது, இத்தகைய ஊகங்களுக்குக் காரணமாயிற்று. அதற்கு முன்பு அவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவைச் சந்தித்தது இந்த யூகங்களை இன்னும் வலுப்படுத்தியது.
தெலங்கானா முதல்வர், பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வியைச் சந்தித்துப் பேசியது இது தொடர்பாகத்தான் என்றும் பேசப்பட்டது. மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்திரசேகர் ராவ் அடுத்தடுத்துச் சந்தித்தது, இந்த யூகங்களை வளர்த்தெடுத்தது. ஆனால், அப்படி எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடக்கவில்லை என்று நிதீஷ் குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். கேசிஆர், மம்தா, கேஜ்ரிவால், உத்தவ் தாக்கரே என்று தேசிய அரசியலிலும் கால்பதிக்க விரும்பும் மாநில முதல்வர்களோடு ஸ்டாலினும் தன்னை இணைத்துக்கொண்டுவிட்டார் என்பது மட்டும் தற்போதைக்கு உறுதியாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT