Published : 01 Mar 2022 08:00 AM
Last Updated : 01 Mar 2022 08:00 AM

பெண்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்துக்கும் நீளட்டும்!

சென்னைப் பெருநகரத்தின் முதலாவது தலித் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவிருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையையொட்டி அமைந்துள்ள புதிய மாநகராட்சிகளான தாம்பரம், ஆவடி ஆகியவற்றிலும் முதல் மேயராக தலித் பெண் பிரதிநிதிகளே பதவியேற்கவுள்ளனர். தவிர, ஒன்பது மாநகராட்சிகளிலும் பெண்கள் பொதுப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது, இனி வரும் காலத்தில் அரசியலில் பெண்களுக்கான இடத்தைத் தவிர்க்கவியலாததாக மாற்றும். 1992-ல் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி தேசிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 33% ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பெண்களுக்கான அரசியல் உரிமைகளைக் குறித்து தீவிரமாக விவாதிக்கும் தமிழ்நாடு, அந்த இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியதன் வாயிலாக முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தன்னையும் நிறுவிக்கொண்டுள்ளது. தமிழ்நாடு தவிர கேரளம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியலில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே உள்ளாட்சி அமைப்பில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான நோக்கம். எனவே, தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை உருவாக்குவதன் வாயிலாகவே பெண்களை அதிகாரமயப்படுத்துதல் என்ற இலக்கை எட்ட முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரிபாதியாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டுவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33% ஆக நிர்ணயிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற இயலாத நிலை நெடுங்காலமாக நீடித்துவருகிறது. மக்களவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தற்போது 14% என்ற அளவிலேயே உள்ளது. கடுமையான போட்டி நிலவும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகள் தயங்குகின்றன.

அரசியல் துறையில் பெண்களின் கள அனுபவங்கள் குறைவாக இருப்பதே அதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. அதனால் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களின்போது பெண்களின் பிரதிநிதித்துவம் என்பதைக் காட்டிலும் அரசியல் கட்சிகளின் வெற்றியே பிரதானமாகிவிடுகிறது. இந்த நடைமுறைச் சிக்கலுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒரு தீர்வாக அமைய முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச் செயல்படும் பெண் பிரதிநிதிகள் இடஒதுக்கீட்டுக்கான சுழற்சிமுறைக் காலம் முடிந்த பிறகும், பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். அவர்களது உள்ளாட்சி அனுபவங்கள், சட்டமன்றத்தை நோக்கியும் நாடாளுமன்றத்தை நோக்கியும் பயணிப்பதற்கான படிக்கல்லாகவும் அமைய வேண்டும். உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்படுவதால், கட்சி வகுத்த பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் உள்ளாட்சித் தலைவர்களின் மீது சுமத்திவிடக் கூடாது. உள்ளாட்சிகளின் தன்னாட்சி மேம்பட வேண்டும், சட்டமியற்றும் சபைகளுக்கான பயிற்சிக் களமாக அவை மாற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x