Published : 22 Feb 2022 07:11 AM
Last Updated : 22 Feb 2022 07:11 AM
நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. யார் வெற்றிபெற்றாலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால், அந்த வெற்றி கொண்டாடக்கூடிய அளவுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்காது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 61% வாக்குகளே பதிவாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, தலைநகரான சென்னையில் சுமார் 43% வாக்குகளே பதிவாகியுள்ளன. பெருந்தொற்று குறித்த அச்சம் நீங்காத நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் சுமார் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு குறைந்திருப்பது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை வாக்காளர்கள் இன்னும் சரியாக உணரவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
தாங்கள் வாழும் பகுதியின் அடிப்படைக் கட்டமைப்புகளையும் எதிர்கால வளர்ச்சியையும், அனைத்துக்கும் மேலாக உள்ளூர் நிர்வாகத்தில் தன்னாட்சியையும் தீர்மானிக்கிற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரத்தில், மக்களின் இந்த மனோநிலைக்கு அரசியல் கட்சிகளும் அரசு நிர்வாகமும்கூட ஒருவகையில் காரணமாக இருக்கின்றன. பெருநகரங்களைப் பொறுத்தவரை, அரசியல் கட்சி நிர்வாகிகளின் மீது மக்களுக்கு மரியாதையைக் காட்டிலும் அச்சமே அதிகமாக இருக்கிறது; அதன் காரணமாகவே, வாக்குச் சாவடிக்குச் செல்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலும், இம்முறை சில இடங்களில் வாக்குச் சாவடி குழப்பங்களின் காரணமாக வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது முழுமையான வாக்குப் பதிவை இலக்காக நிர்ணயித்துத் தேர்தல் ஆணையம் செயல்பட்டதைப் போல, மாநிலத் தேர்தல் ஆணையம் அப்படியொரு பிரச்சார இயக்கத்தைத் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. வேட்பாளர்கள் இத்தேர்தலில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாததும் வாக்காளர்களின் ஆர்வமின்மைக்கான முக்கியக் காரணம்.
இவற்றைத் தவிர, அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுகளும்கூட வாக்குப் பதிவு குறைந்ததற்கான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றன. திமுகவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மூத்த நிர்வாகிகள் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படிக் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி ஒருபுறம் என்றால், ஒதுக்கப்பட்ட தொகுதிகளைக் குறித்தும் எண்ணிக்கை குறித்தும் திமுகவின் கூட்டணிக் கட்சியினரிடமும் அதிருப்தி நிலவுகிறது.
கும்பகோணம் நகராட்சியில் சிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக அதிருப்தி வேட்பாளர் மனு தாக்கல் செய்ய, சிபிஐ வேட்பாளர் தனது வேட்பு மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். கூட்டணி உடன்படிக்கையை மீறியவர்களைக் கட்சியிலிருந்து ‘தற்காலிகமாக’ நீக்குவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அறிக்கையை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் அமமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்துள்ளது. திமுகவின் கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் மன விரிசல்களையும்கூட இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT