

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கடும்வெயிலாலும் கூட்ட நெரிசலாலும் பாதிக்கப் பட்டவர்களில் இருவர் உயிரிழந்திருப்பது தமிழகத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்துக்காக வெட்டவெளியில் தொண்டர்கள் காத்திருந்தனர். வெயில் தாங்க முடியாதவர்கள் ஒருகட்டத்தில் வெளியேற முயன்றபோது, நெரிசலில் சிக்கினார்கள். மொத்தம் 19 பேர் காயமடைந்த தாகவும், அதில் இருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகல் 12 மணியில் இருந்தே அமர வைக்கப்பட்டிருந்த மக்களிடம் மாலை 3 மணிக்குத்தான் ஜெயலலிதா உரையாற்றத் தொடங்கினார். காத்திருந்த மக்களுக்கு வெயிலின் உக்கிரத்தைச் சமாளிக்கும் நிழலோ, குடிநீரோ போதிய அளவில் இல்லை. தாங்க முடியாமல் கிளம்பியவர்கள் தடுக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நெரிசலில் 19 பேர் மயக்கமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில்இருவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார்கள். மேலும், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
உயிரிழந்த அதிமுகவினர் இருவரும் உடல்நலக் குறைவால் இறந்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு கட்சி சார்பில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். கூட்டத்தில் மக்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக காவல் துறையினரைக் கண்டித்துள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுக மட்டுமில்லை, தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களில்கூடத் தொண்டர்கள் விஷயத்தில் இதுபோன்ற நடைமுறைகள்தான் கடைப்பிடிக்கப்படுகின்றன.
மேடையில் அமர்ந்துள்ள தலைவர்களுக்குக் குளிர்சாதன வசதிகளும் குடிநீர்வசதிகளும் உள்ளன. அவ்வாறே தொண்டர்களுக்கும் போதிய அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஆனால், பல நேரங்களில் போதிய அளவில் இருக்கைகள்கூட இருப்பதில்லை. தாகம் தீர்க்க தண்ணீரைத் தேடிச் செல்ல வேண்டும். எழுந்து சென்றுவிட்டால் இருக்கை பறிபோய்விடும் என்பதால் பலர் இருக்கும் இடத்தைவிட்டு நகர்வதில்லை. இயற்கை உபாதைகளுக்கான கழிப்பிடத் தேவைகள் பெரும்பாலும் பொதுக்கூட்டத் திடல்களில் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. பகல் நேரப் பொதுக்கூட்டங்கள் எல்லாவற்றிலும் நிழல் தரும் பந்தல்கள் போடப்படுவதில்லை. தலைவர்களின் மேடைக்கு அருகே தீயணைப்பு வாகனமும், ஆம்புலன்ஸும் எப்போதும் தயாராக இருக்கின்றன. ஆனால், தொண்டர்களின் அவசரத் தேவைகளுக்கான முதலுதவிச் சிகிச்சைக்குக்கூட வழி இருப்பதில்லை.
தற்போது இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. அதனால், எல்லா கட்சிகளும், உச்சி வெயில் நேரத்தில்கூட பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. ஜனநாயகத்தின் முக்கியக் கண்ணியே தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படும் நேரடித் தொடர்புதான். அதைத் தகர்க்கும் விதமாக இந்த நேரக் கட்டுப்பாடு செயல்படுகிறது. 1980-கள் வரையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய நேரக் கட்டுப்பாடு இல்லாத நிலை இருந்தது. மீண்டும் பழைய நிலையைக் கொண்டுவருவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம்.
இரவு நேரப் பிரச்சாரத்தை அனுமதித்தால் வெயில் தொல்லை, தாகம், கடுமையான நீர் இழப்பு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதேசமயம், இரவு நேரத்துக்கு ஏற்றவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
தலைவர்களின் அழைப்பை ஏற்று வருகிற தொண்டர்களை, வெறும் எண்ணிக்கையாகப் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் நடத்தும் அணுகு முறை அரசியல் கட்சிகளுக்கு வந்துவிட்டால், இது எல்லாம் மாறிவிடும். வாக்களிக்கும் இயந்திரங்கள் அல்லவே மக்கள்!