Published : 16 Feb 2022 06:32 AM
Last Updated : 16 Feb 2022 06:32 AM

உக்ரைன் பதற்றம் தணிய வேண்டும்

உக்ரைன் எல்லைப் பகுதியில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை நிறுத்தி அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்துவருவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா எச்சரிக்கைகள் விடுத்தும் ரஷ்யா தனது பயிற்சி நடவடிக்கைகளை முழுவதுமாக இன்னும் விலக்கிக்கொள்ளவில்லை. பிப்ரவரி 16 அன்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக வெளிவந்த செய்திகளையடுத்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தின. உக்ரைனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளும் வெளியேறத் தொடங்கியது இந்த அச்சத்துக்கு மேலும் வலுசேர்த்தது. எனினும், ரஷ்யா ராஜதந்திரரீதியில் இந்தப் பிரச்சினையை நீட்டிப்பதற்கான சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.

எல்லையின் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் எல்லையிலிருந்து படைப்பிரிவுகளை விலக்கிக்கொள்ளவும் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருப்பதிலிருந்து அவருக்குப் போரை நோக்கி நகரும் உத்தேசமில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஜெர்மன் பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸுடன் இணைந்து புடின் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு பதற்றத்தைத் தணிக்கும் அதே வேளையில் ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவை, கிழக்கு உக்ரைனை சுதந்திரம் பெற்ற தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமாறு அதிபர் புடினைக் கேட்டுக்கொண்டிருப்பது பதற்றத்தைத் தணிப்பதாகவும் இல்லை.

ஒருவேளை ரஷ்யா தாக்குதலில் ஈடுபட்டால், உக்ரைனுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிக்கக்கூடும். ஏற்கெனவே போலந்து நாட்டின் எல்லையில் நேட்டோ படைகள் களமிறக்கப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு போலந்து தயாராகிவருகிறது. அதற்கான உதவிகளை அமெரிக்கா செய்துவருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலமாக போர்ப் பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் உலகம் முழுவதும் எழுந்துள்ளன.

குறிப்பாக, மேற்குலக நாடுகள் உக்ரைன் மீதான போரைத் தவிர்க்குமாறு ரஷ்யாவுக்கு மேலதிக அழுத்தத்தை உருவாக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தோல்வியடைந்த பழைய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் பேசப்படுகிறது. ஆனால், உக்ரைன் தனக்குக் கட்டுப்பட்ட நாடாக இருக்க வேண்டும், நேட்டோவின் அங்கமாக மாறிவிடக் கூடாது என்று ரஷ்யா விரும்புகிறது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்பும், உக்ரைன் மீதான அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே ரஷ்யா விரும்புகிறது. தனக்கு ஆதரவான ஆட்சியாளர்களை அமர்த்துவது, அந்த முயற்சிகள் தோல்வியடையும்போது எல்லைப் பகுதிகளைக் கைப்பற்றுவது, பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்பது என்று தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது ரஷ்யா.

மொத்தத்தில், ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் உக்ரைன் ஒரு பகடைக்காயாக உருட்டப்படுகிறது. இருவேறுபட்ட அதிகார மையங்களின் எல்லைப் பகுதிகளுக்கு நடுவே அமைந்திருப்பதாலேயே இச்சிக்கலை உக்ரைன் எதிர்கொண்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நிலையில் பின்னடைவைச் சந்தித்துள்ள உக்ரைன் போர்ப் பதற்றச் சூழலால் மேலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அங்கு நிலவும் பதற்றநிலை விரைவில் தணிய வேண்டும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x