Published : 15 Feb 2022 09:45 AM
Last Updated : 15 Feb 2022 09:45 AM

குறைந்துவரும் தொற்று: கவனமும் எச்சரிக்கையுணர்வும் முன்புபோலவே தொடரட்டும்!

ஒமைக்ரான் தொற்றின் பரவல் வேகமாக உயர்ந்ததைப் போலவே, அதே வேகத்தில் குறைந்தும் வருகிறது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உருமாறிய தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பிப்ரவரி 16-ம் தேதியிலிருந்து பொருட்காட்சிகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் முழுமையான அளவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். மழலையர் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன.

கடந்த ஜனவரியில் தொற்றுப் பரவல் அதிகரித்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் வார இறுதி நாட்களில் வழிபாட்டிடங்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. தொற்றுப் பரவல் குறைந்ததையொட்டி, இந்தக் கட்டுப்பாடுகள் ஏற்கெனவே விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. பிப்ரவரி 16 முதல் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ள முதல்வர், உரிய வயதடைந்த அனைவரும் இரண்டு தவணைத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வதோடு, பொது இடங்களில் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் வாழ்வாதாரம் கருதியே இந்தத் தளர்வுகள் அனுமதிக்கப்படுவதாக அவர் கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஒமைக்ரான் பரவல் குறைந்திருந்தாலும், கரோனா மீதான அச்சவுணர்வு முழுமையாக நீங்கிவிடவில்லை. கணிசமான எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டிருந்ததன் காரணமாகவே, ஒமைக்ரான் பாதிப்புகளைக் குறைக்க முடிந்திருக்கிறது. ஆனால், உலகளவில் இன்னும் முழுமையான அளவில் தடுப்பூசி போடப்படவில்லை. ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில், தடுப்பூசி போடப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிக அளவில் உள்ளது. கனடா, தனது நாட்டில் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் 11 தவணைத் தடுப்பூசிகளை இருப்பில் வைத்துள்ளது.

அதே நேரத்தில் சோமாலியா, செனகல் போன்ற நாடுகளில் நூறு பேரில் ஒருவருக்கு மட்டுமே ஒரு தவணைத் தடுப்பூசி போட முடியும். ஆப்பிரிக்க நாடுகளின் தடுப்பூசித் தேவைகள் பூர்த்திசெய்யப்படாத வரையில், அங்கு உருமாறிய புதிய தொற்றுகள் தோன்றுவதற்கான அபாயமும் உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்றுப் பரவல் குறைவாகவே அடையாளம் காணப்பட்டிருந்தாலும், அங்கு தொற்றுப் பரிசோதனைகள் மிகவும் குறைவாக மேற்கொள்ளப்பட்டன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

அனைத்து நாடுகளும் தடுப்பூசிப் பாதுகாப்பைப் பெறாதவரையில், தொற்றுகளின் உருமாற்றம் தவிர்க்கவியலாதது. மூன்று தவணைத் தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்ட இஸ்ரேல் நாட்டிலும்கூட ஒமைக்ரான் தொற்று பரவியது என்பது ஓர் எச்சரிக்கை. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், தங்களது தடுப்பூசிகளில் சரிபாதி அளவுக்கு ஏழை நாடுகளுக்கு உதவியதன் காரணமாகவே டெல்டா, ஒமைக்ரான் ஆகிய உருமாறிய தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து நின்றே இனி எந்தவொரு தொற்றையும் எதிர்கொள்ள முடியும் என்ற வலுவான செய்தியை கரோனா நமக்கு உணர்த்தியிருக்கிறது. அந்த உலகளாவிய கடமையில், இந்தியாவும் தனது பங்கை உரிய வகையில் செலுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x