Published : 09 Feb 2022 06:06 AM
Last Updated : 09 Feb 2022 06:06 AM

மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தாமதப்படுத்தக் கூடாது

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில், கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்கின. ஜூன் 2022 வரையில் மாவட்ட எல்லைகளைத் திருத்தியமைக்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்டது நான்காவது முறையாகும்.

இதற்கு முன்பு, முதன்முறையாக ஜனவரி 1, 2020 தொடங்கி மார்ச் 31, 2020 வரையில் மாவட்ட மறுவரையறைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் கால அளவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னால், மாவட்ட மறுவரையறைகளை நிறுத்திவைப்பது ஒரு கட்டாய விதிமுறையாகும். ஆனால், கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இன்னமும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை.

கடந்த 2011-ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது இந்தியா முழுவதும் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன. தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கையில் மேலும் 100 கூடியிருக்கிறது. இந்த முறை நடக்கவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளோடு தேசியக் குடியுரிமைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணியும் சேர்த்து மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டது என்றாலும், சில மாநிலங்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்துவிட்டன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான உத்தேசச் செலவு ரூ.8,700 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இது அதிக செலவைக் கோருகிற திட்டமாக இருந்தாலும், இந்தியாவின் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் தெளிவான தரவுகளைத் தொகுப்பதற்கான ஒரே வழிமுறையாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பே இருந்துவருகிறது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகிற இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்கள், இந்தியாவுக்கு வெளியிலுள்ள மக்கள்தொகையியலர்களாலும்கூட தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடற்ற வகையில் பல்கிப் பெருகும் இந்திய மக்கள்தொகை எப்போதும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்துவருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தபோதும், குறிப்பிடத்தக்க வகையில் எந்தப் பலனும் இல்லை.

உலகில் சராசரியாக ஆறு நபர்களில் ஒருவர் இந்தியர் என்ற மதிப்பீடு, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள பெரும் பொறுப்பை உணர்த்துகிறது. அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பதை மனிதவளமாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வையும் நிலவுகிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மதரீதியான சாயங்களும்கூட பூசப்படுகின்றன.

மக்கள்தொகையில் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் விகிதாச்சாரம் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்துகளும் உண்டு. மக்கள்தொகைக் கணக்கெடுப்பால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சரியான ஒரு பதிலைக் கொடுக்க முடியும். பெருந்தொற்றுக் காலத்தில் மக்களை அணுகித் தகவல்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்தக் கணக்கெடுப்பை இணையவழியில் மேற்கொள்வது பற்றியும்கூடப் பரிசீலிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x