

நீட் தேர்வுக்கு விலக்களித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் திருப்பியனுப்பியது தொடர்பாக எழுந்த அரசியல் பதற்றம், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு சற்றே தணிந்திருக்கிறது. சிறப்பு சட்டமன்றத் தொடரைக் கூட்டி, இளநிலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவெடுத்திருப்பதே சரியான அணுகுமுறை. அரசமைப்புரீதியிலும் அதுவே சரியானது.
ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம்காட்டி, ஆளுநர் சட்ட முன்வடிவில் கையெழுத்திடாமல் திருப்பியனுப்பினார் என்பதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று உடனடியாக மக்களவையில் எழுந்த முழக்கங்கள், அரசமைப்பு குறித்த புரிதலின்மை என்பதைக் காட்டிலும் உணர்ச்சிகரமான அரசியல் காட்சிகளாகத்தான் பொருள்கொள்ளப்படும்.
ஏற்கெனவே, அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்களித்து நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பியனுப்பப்பட்டது. இப்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநராலேயே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது கையெழுத்திடுவது தவிர்த்து, சட்டமன்றத்துக்குத் திருப்பியனுப்பவும், குடியரசுத் தலைவரிடம் கருத்துக் கேட்டு அனுப்பவும் ஆளுநர் முழு அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
இவை ஒவ்வொன்றுக்கும் எந்தவொரு கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, ஆளுநருக்கு அனுப்பப்படுகிற எந்தவொரு சட்ட முன்வடிவும் இவற்றில் எந்தவொரு முடிவையும் சந்திக்க நேரிடலாம். ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் ஒரு இடுகையின் மீது சட்டமன்றத்தின் கருத்தையே ஆளுநரும் பிரதிபலிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. மக்களின் கருத்துகளைச் சட்டமன்றம் பிரதிபலிக்கிறது, அதற்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்பப்படுகிறது. ஆனால், ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசின் கருத்தை எதிரொலிக்கும் வகையிலேயே நமது அரசமைப்பு அமைந்துள்ளது.
சட்டமன்றத்தால் மீண்டும் ஒருமுறை நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டாலும்கூட, ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் அதைக் குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்டு அனுப்பிவைத்தால், குடியரசுத் தலைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும் தீர்ப்பு சாதகமாக இருக்கும் என்பதற்கும் உறுதியில்லை. ஒத்திசைவுப் பட்டியலைப் பொறுத்தவரை, மத்திய அரசு தனக்கான அதிகாரத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதே இந்தப் பிரச்சினையின் மையம்.
இந்நிலையில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தனிநபர் மசோதா முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. நல்லதொரு விவாதத்தைத் தொடங்கிவைக்கும். எனினும், மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன் விளங்கும் பாஜக மனம் இறங்கிவந்தால்தான் அந்த மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகும். தற்போது தமிழ்நாட்டுக்கு முன்னுள்ள தீர்வு என்பது, மத்திய அரசோடு ஒரு மனம்திறந்த உரையாடல்தான். நீட் தேர்வு விலக்கு அல்லது தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டை இரு மடங்காக உயர்த்துவது அல்லது தமிழ்நாட்டில் மேலும் கூடுதல் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதி என்று எல்லா வகை அஸ்திரங்களையும் கையிலெடுக்கத் தயாராக வேண்டும்.