Published : 03 Feb 2022 07:00 AM
Last Updated : 03 Feb 2022 07:00 AM

உள்கட்டமைப்புச் செலவினங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குமா?

பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து பொருளாதாரத்தை விரைந்து மீட்டெடுப்பதற்காக, உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது மத்திய நிதிநிலை அறிக்கை. இச்செலவுகள் அடுத்து வரும் நிதியாண்டில் மட்டுமின்றி, அதற்கடுத்த நிதியாண்டுகளிலும் தொடரக் கூடியவையாக இருக்கும். ஆனால், இந்தச் செலவினங்களால் மட்டும் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளையும் பணப்புழக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்திருந்தால் வேலைவாய்ப்பின்மையைக் குறைப்பதற்கு நேரடியாக உதவியிருக்கும் என்ற நோக்கிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

வேலையின்மையைக் குறைக்க, சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஒரு மரபாகவே தொடர்ந்துவரும் நிலையில், தற்போதைய மத்திய நிதிநிலை அறிக்கை அதிலிருந்து விடுபட்டு, புதிய முயற்சிகளை நோக்கி நகரவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், உற்பத்தித் தொழில் துறை கடந்த சில ஆண்டுகளாக வகித்துவந்த 15% என்ற நிலையான விகிதம் மிகப் பெரும் சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில், உள்கட்டமைப்புகளுக்காக அரசு உத்தேசித்துள்ள நிதி ஒதுக்கீடுகள், உற்பத்தித் தொழில் துறையின் சந்தைத் தேவைகளை அதிகரிக்க உதவ வேண்டும். மாநில அரசுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக ரூ.1 லட்சம் கோடியை 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடனாக வழங்க முன்வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பை அரசே சுமக்க வேண்டியிருக்கிறது. 2022-23-ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.4% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. 15-வது நிதிக் குழு பரிந்துரைத்த 5.5% என்ற அளவைக் காட்டிலும் இது அதிகமே. வரிவருமானப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய, பொதுத் துறை சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை பலத்த எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் இடையே இந்த நிதியாண்டிலும் தொடர்கிறது. கல்வி, சுகாதாரம், சத்துணவு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றங்கள் இல்லை என்ற விமர்சனமும் வழக்கம்போல எழுந்துள்ளது.

ரிசர்வ் வங்கி விரைவில் டிஜிட்டல் பணத்தை வெளியிடும் என்ற அறிவிப்பால், மெய்நிகர் பண முறையை இந்தியா ஏற்றுக்கொள்வது உறுதியாகிவிட்டது. மெய்நிகர் பணத்தில் முதலீடு செய்தவர்கள், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 30%-ஐ வரியாகச் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு, இப்பரிமாற்றங்களை முறைப்படுத்தவும் உதவும். கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்கு முன்பு மாநிலங்களுக்கு இடையே நதிகளை இணைப்பது குறித்துப் பேசப்பட்டபோதெல்லாம், நதிநீர் உரிமைகள் குறித்த விவாதங்கள் திசைதிருப்பப்பட்டன என்பதையும் கவனத்தில் கொண்டால் நல்லது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதற்கான நோக்கத்தோடு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிதிநிலை அறிக்கையின் வெற்றி, அதை முறையாகச் செயல்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x