Published : 01 Feb 2022 08:47 AM
Last Updated : 01 Feb 2022 08:47 AM
கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்து முன்மொழிந்த உறுதிமொழி, ஒரு புதிய கொள்கையாக உருப்பெறும் நாளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது. டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநிலப் பெண்களுக்கான புதிய கொள்கை வரைவு, மக்களின் கருத்தறிவதற்காக முன்வைக்கப்பட்டு, அதற்கான இறுதித் தேதி நேற்றுடன் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த வரைவு குறித்துத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு கொள்கை விரைவில் இறுதிவடிவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெண்களுக்கான புதிய கொள்கையின் வரைவு வெளிவந்தபோதே, அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது. குடும்பச் சூழலின் காரணமாகப் பணியிலிருந்து விலகிய பத்தாயிரம் பெண்களுக்கு மீண்டும் பணிவாய்ப்பைப் பெற்றுத்தரும் வகையில் அவர்களது தொழில்திறன்களை மேம்படுத்த இந்த வரைவு அறிக்கை உறுதியளித்துள்ளது. மாதவிடாய் நின்றுவிட்ட (மெனோபாஸ்) காலத்தில், பணியில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் சிறப்பு விடுப்புகளை வழங்கவும் இவ்வரைவு உத்தேசித்துள்ளது.
தமிழ்நாட்டில் இது நடைமுறைக்கு வரும்போது, உலகத்துக்கே அது முன்னுதாரணமாக இருக்கும். உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பானது, அவர்களது உடல்நலத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளும் இந்த வரைவு, மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்தாலும் அமைப்புசார் பணிகளில் உள்ள பெண்களுக்கு மட்டுமே அது பயன்படக் கூடியதாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும், அரசின் ஆதரவு தேவைப்படும் அனைத்துப் பெண்களையும் அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் என்று பல்வேறு பிரிவினராக இந்த வரைவு வகைப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சிகளை அளிப்பது, பெண்களுக்குப் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்துவது, ஒரு கோடிப் பெண்களைச் சுய உதவிக் குழுக்களின் கீழ் ஒன்றிணைப்பது, மகளிர் வங்கியை நிறுவி, கடன்பெறும் வசதிகளை உருவாக்குவது என்று இந்தக் கொள்கை துறைவாரியாகப் பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் இலக்குகளாகக் கொண்டுள்ளது.
2001-ல் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசியக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், மாநில அளவில் பெண்களுக்கான ஒரு கொள்கை வகுக்கப்படுவது முன்னுதாரணம் இல்லாத ஒரு நிகழ்வாகும். வீடுகளில் பாலின சமத்துவமின்மையை மதிப்பிடும்வகையில் வீடுதோறும் கணக்கெடுப்புகளை நடத்தவும் இந்த வரைவு திட்டமிட்டுள்ளது. சுயமரியாதையை ஒரு அரசியல் கொள்கையாக மட்டுமின்றி, வாழ்க்கைக் கொள்கையாகவும் வரித்துக்கொள்ளும் சூழலை இந்தக் கொள்கை உருவாக்க முனைகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரைவின் மீது அனைத்துத் தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அளவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT