Published : 28 Jan 2022 06:41 AM
Last Updated : 28 Jan 2022 06:41 AM
இந்தியாவின் மிக உயரிய மூன்றாவது விருதான பத்மபூஷண் விருது, மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவ்விருதை அவர் மறுத்திருப்பதை ஆதரித்தும் விமர்சித்தும் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டுவருகின்றன. இளம் வயதிலேயே முழுநேர அரசியல் செயல்பாட்டாளராகத் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கிய புத்ததேவ் பட்டாச்சார்யா, சுமார் 24 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 10 ஆண்டுகள் மாநில முதல்வராகவும் பொறுப்பு வகித்தவர்.
அவருக்கு, பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகப் பொருத்தமானது. ஆனால், 80 வயதை நெருங்கும்நிலையில் உடல் தளர்ந்து, பொதுவாழ்க்கைச் செயல்பாடுகள் குறைந்துவிட்ட தருணத்தில், இந்த விருதை அறிவிப்பது நியாயமானதாக இருக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் என அனைவருக்கும் அவர்கள் மிகவும் ஊக்கத்துடன் செயல்படும் காலத்திலேயே இத்தகு விருதுகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
மேற்கு வங்கத்தில் பாஜக, சிபிஐ(எம்) கட்சிகள் எதிரெதிராகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் நிற்கும்போது, இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பதில் வாக்கரசியல் கணக்கீடுகளும் உண்டோ என்ற சந்தேகத்துக்கும் இடமளிக்கிறது. சிபிஐ(எம்) கட்சியின் மேற்கு வங்கப் பிரிவு, தங்களது பிரதான அரசியல் எதிரியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியைக் கருதுவதால், கடந்த சில தேர்தல்களில், சில தொகுதிகளில் பாஜக வெற்றிபெறவும் துணைநின்றதாக விமர்சனங்கள் எழுந்தன. அதையும் கணக்கில் கொண்டால், பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த விருது அறிவிப்பு, வாக்காளர்களிடம் தமக்குச் சார்பான எண்ணங்களை உருவாக்கும் வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது.
‘விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது, அவ்வாறு ஏதேனும் அறிவிக்கப்பட்டால் அதை மறுத்துவிடுவேன்’ என்று புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியதாகச் செய்திகள் வெளியாகின. அறிவிக்கப்படும் விருதை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவரது உரிமை. ஆனால், அரசால் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது தங்களின் கட்சிக் கொள்கை என்றும் தங்களது அரசியல் பணிகள் மக்களுக்கானதேயன்றி விருதுகளுக்காக அல்ல என்றும் சிபிஐ(எம்) விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலைப்பாட்டுக்கு முன்னுதாரணமாக ஏற்கெனவே இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தனக்கு அறிவிக்கப்பட்ட விருதை மறுத்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்டு, ஆட்சிப் பொறுப்புகளையும் வகித்த ஒரு கட்சியின் இந்தப் பதில் அதிர்ச்சியை உருவாக்கலாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து சிபிஐ(எம்) விலகியபோது, கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக, மக்களவைத் தலைவராகப் பொறுப்பில் இருந்த சோம்நாத் சாட்டர்ஜியைக் கட்சியிலிருந்து நீக்கிய அதிர்ச்சியைக் காட்டிலும் இது பெரிதானது அல்ல. ஒரு மக்களாட்சி நாட்டில், அரசின் பெயரில் வழங்கப்படுகிற விருது என்பது மக்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி ஆட்சியிலும் விருதுகள் அறிவிக்கப்படத்தான் செய்கின்றன. அவை, அரசின் விருதுகளே அன்றி, கட்சியின் விருதாகக் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT