வழக்கு தொடர்வதிலும் ஆள்மாறாட்டமா?

வழக்கு தொடர்வதிலும் ஆள்மாறாட்டமா?
Updated on
1 min read

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை ஆயத்தில் தனி நீதிபதி அமர்வின் முன்னால் சமீபத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு, நீதிமன்ற நடைமுறைகளில் கவனம் கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினை குறித்த முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தில் அமைந்துள்ள மணிவாசகர் நிலையத்தில் நடத்தவிருக்கும் வழிபாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தான் அவ்வாறு எந்த வழக்கும் தொடரவில்லை என்றும் வழக்கோடு தொடர்புடைய பிரமாணப் பத்திரத்தில் தான் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்தார். அதையடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, மோசடியான முறையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் மீது நீதிமன்றப் பதிவாளர் குற்றவியல் புகார் செய்ய உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, பதிவாளரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட அந்தக் குற்றவாளி இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

வழக்கின் பொருண்மையோடு தொடர்பில்லாத மூன்றாவது நபர் வழக்கு தொடர்வதைப் பொதுவாக நீதிமன்ற நடைமுறைகள் அனுமதிப்பதில்லை. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் தொடரப்படும் பொது நல வழக்குகளின்போதும்கூட, வழக்காடும் உரிமைக் கோட்பாடு கவனத்தோடு பரிசீலிக்கப்பட்டே விலக்குகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், வழக்கோடு தொடர்பில்லாத ஒரு மூன்றாவது நபர், மற்றொருவரின் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியான முறையில் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பொன்றும் இருப்பதைச் சமீபத்திய இந்த வழக்கு எடுத்துக்காட்டியுள்ளது. இக்குற்றச்செயலில் ஈடுபட்டவரை அடையாளம் கண்டு, அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதோடு, இப்படியொரு மோசடி மீண்டும் நிகழாதவண்ணம் தடுக்க வேண்டிய முன்னேற்பாடுகளையும் செய்தாக வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வழக்கின் உத்தரவில், புகார்தாரருக்காக ஆஜரான வழக்கறிஞரின் பொறுப்பு என்பது தம் முன் கையெழுத்திடப்பட்டதற்கான சாட்சி என்ற அளவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர்கள் தாங்கள் வழக்காடும் தரப்பினர் அனைவரின் அடையாளங்களையும் நினைவில் கொள்வது இயலாத ஒன்று. என்றாலும், நீதிமன்றங்கள் அனைத்தும் வழக்குகளால் நிறைந்து வழியும்நிலையில், நீதிமன்ற அலுவலகங்களைப் போலவே வழக்கறிஞர்கள் அலுவலகங்களும் சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவற்றில், வழக்காடும் தரப்பினரின் அடையாளச் சான்றுகளைச் சரிபார்ப்பதும் முதன்மையான பொறுப்புகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, புகார்தாரர் அவரது மாவட்ட எல்லைக்குள் பதிவுபெற்றுள்ள ஆணையுரை செய்துவைக்கும் ஆணையர் ஒருவரது முன்னிலையில் தனது பிரமாணத்தை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். உச்ச நீதிமன்ற வழக்குகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறையை உயர் நீதிமன்றங்களுக்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும்கூட விரிவுபடுத்தலாம். நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதில் ஆள் மாறாட்டங்களுக்கான வாய்ப்பு, முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டியது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in