Published : 19 Jan 2022 06:43 AM
Last Updated : 19 Jan 2022 06:43 AM

பத்திரிகையாளர் மன்றத்தில் காவல் துறையின் அத்துமீறல் கண்டனத்துக்குரியது

காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளையும் சச்சரவுகளையும் அடுத்து, அம்மன்றம் இயங்கிவந்த கட்டிடத்தை ஒன்றியப் பிரதேச நிர்வாகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கும் முடிவு இப்பிரச்சினையை மேலும் சிக்கலுக்குரியதாக மாற்றியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்த சில உறுப்பினர்கள், அங்கிருந்த முத்திரைகள் உள்ளிட்ட எழுதுபொருட்களைக் கைப்பற்றிக்கொண்டனர்.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், அம்மன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என்பதும், பெருந்தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள நிலையில் மன்றச் செயல்பாடுகள் தடைபடக் கூடாது என்பதும். அரசுத் தரப்போ, பத்திரிகையாளர் மன்றத்தின் பதிவு புதுப்பிக்கப்படவில்லை, முறையாகத் தேர்தல் நடத்தப்படவில்லை, மன்றம் செயல்பட்டுவந்த கட்டிடம் சட்டவிரோதமான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவந்தது என்பது போன்று பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ளது.

மன்றத்தின் கட்டிடத்தைக் கைப்பற்றிய சில உறுப்பினர்கள், தங்களை அம்மன்றத்தின் இடைக்கால நிர்வாகிகளாகவும் அறிவித்துக்கொண்டுள்ளனர். அதையே காரணம்காட்டி, எந்தவொரு அமைப்புமே அந்தப் பெயரில் அறிக்கைகளை வெளியிடவோ அந்தப் பெயரில் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளவோ கூடாது என்று ஒன்றியப் பிரதேச நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மன்றத்தை உரிய காலத்தில் புதுப்பிக்காததுதான் கட்டிடத்தைக் கையகப்படுத்திக்கொள்வதற்கான காரணம் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டாலும், இது ஒரு கட்டாய வெளியேற்றம் என்றே இந்தியா முழுவதும் உள்ள பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டிக்கின்றன. காரணம், மன்றத்தின் சில உறுப்பினர்கள் கட்டிடத்தை ஆயுதம்தாங்கிய காவல் துறையின் உதவியோடுதான் கைப்பற்றியுள்ளனர். மன்றத்தின் தேர்தல்கள் தாமதமாகியிருந்தாலும், வருகின்ற பிப்ரவரியில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடாகிவந்த நிலையில், தற்போது நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகள் தவறான முன்னுதாரணம் என்றும் கவலைகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

‘எடிட்டர்ஸ் கில்டு’ போன்ற பத்திரிகையாளர் சங்கங்கள் மட்டுமின்றி காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் அரசின் துணையோடு நடத்தப்பட்டிருக்கும் கட்டாய வெளியேற்றம் என்றே இந்நிகழ்வைக் கண்டித்துள்ளார். காஷ்மீரில் அதிகபட்ச எண்ணிக்கையில் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு மன்றத்தின் கட்டிடத்துக்குள் ஆயுதம் தாங்கிய காவல் துறையினரின் உதவியோடு ஒரு குழுவினர் நுழைந்து நிர்வாகத்தைக் கைப்பற்றுவது என்பது கருத்துரிமைக்கு விடப்பட்டுள்ள சவால் என்றே கருதப்படுகிறது.

நீதித் துறையிடமிருந்து எந்தவொரு முன் அனுமதியும் இல்லாமல் காவல் துறையினர் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்தது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தவொரு காரணத்தைக் கூறியும் அதை நியாயப்படுத்த முடியாது. மன்ற நிர்வாகிகளைக் கட்டாயமாக வெளியேற்றிப் புதிய நிர்வாகிகள் என்று சிலர் தாங்களே அறிவித்துக்கொண்டிருப்பதும் தவறானது. மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொள்ளும்வரை ஏற்கெனவே இருந்த நிலை தொடர்வதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் காவல் துறை அத்துமீறி நுழைந்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியதும் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x