துணைவேந்தர் நியமன சர்ச்சைகள்: உயர்கல்வி மீதான அக்கறையாக விரிவுபெறட்டும்

துணைவேந்தர் நியமன சர்ச்சைகள்: உயர்கல்வி மீதான அக்கறையாக விரிவுபெறட்டும்

Published on

தமிழ்நாடு சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரத்தையும் மாநில அரசிடமே ஒப்படைக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் நியமிக்கப்பட்ட சில துணைவேந்தர்கள், மாநில அரசின் விருப்பத்துக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளனர்; அதன் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு இந்த முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாகப் பேசப்படுகிறது.

இதே நேரத்தில், நம்முடைய அருகமை மாநிலமான கேரளத்தின் ஆளுநர், சட்டமன்ற அவையை உடனே கூட்டிப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. முதல்வரையே வேந்தராக நியமித்துக்கொள்ளுங்கள், தேவையென்றால் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவும் தான் தயாராக இருப்பதாகக் கேரள ஆளுநர் கூறியிருப்பது இப்பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. வேந்தர் பொறுப்பிலிருந்து தாம் விலக விரும்புவதற்கான காரணங்களை வெளிப்படையாக அவர் சொல்லவில்லையென்றாலும் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களில் ஆளுங்கட்சி வரம்புமீறிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரை நியமிப்பது ஒரு மரபாக இருந்துவருகிறது. அதன் நீட்சியாகத் துணைவேந்தர் நியமனத்திலும் அவரது அதிகாரம் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதியாகவே இருக்கிறார் என்ற நிலையில், துணைவேந்தர் நியமனங்களில் மத்திய அரசின் தலையீடும் நிகழ்கிறது. மாநிலத்தின் ஆளுங்கட்சி மத்தியில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, துணைவேந்தர் நியமனத்தில் தனக்கான உரிமையை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதில்லை. கடந்த டிசம்பரிலேயே மஹாராஷ்டிரத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்களைக் குறைக்கும்வகையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுக் கையெழுத்துக்குக் காத்திருக்கிறது. மேற்கு வங்கத்தில், மாநில முதல்வரையே அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக நியமிப்பதற்கான யோசனை விவாதிக்கப்பட்டுவருகிறது.

கல்வியாளர்கள் அரசியல் சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். உயர்கல்வியிலும் ஆராய்ச்சித் துறைகளிலும் அதன் தாக்கங்கள் இருக்கவே செய்யும். ஜனநாயக நாட்டில் அதுவும் அனுமதிக்கப்பட வேண்டும். மாநில அரசு நியமித்த துணைவேந்தர்களிடம் இந்தச் சார்புநிலைகள் வெளிப்படையாகவே அனுமதிக்கப்பட்ட நீண்ட நெடிய வரலாறும் உண்டு. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (யூஜிசி) நல்கைகளைப் பெறுவதாலும் அதன் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதாலுமே மாநில அரசால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் சொற்படியும் அதன் பிரதிநிதியான ஆளுநர் சொற்படியும் நடக்க வேண்டுமா என்ற கேள்வியே தற்போது முதன்மை பெறுகிறது.

ஆனால், துணைவேந்தர் நியமனத்தில் மாநில உரிமை பேசும் கட்சிகள், உயர் கல்வித் துறையின் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதில் ஏன் போதிய அக்கறை காட்ட மறுக்கின்றன என்பதும் தவிர்க்கவியலாத மற்றொரு கேள்வி. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் தொடங்கி அலுவலக ஊழியர்களின் நியமனம் வரை எதிலும் வெளிப்படைத்தன்மையில்லை. பல்கலைக்கழகங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளை நிர்வகிக்கும் அமைப்புகளாக இருக்கின்றனவேயொழிய, ஆராய்ச்சித் துறையில் மேலதிக அக்கறையைக் காட்டுவதில்லை. துணைவேந்தர் நியமனங்களை மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளையும்கூட விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in