Published : 11 Jan 2022 06:02 am

Updated : 11 Jan 2022 06:02 am

 

Published : 11 Jan 2022 06:02 AM
Last Updated : 11 Jan 2022 06:02 AM

பிரதமரின் பாதுகாப்பு: உயர்மட்டக் குழு விசாரணையில் உண்மை தெரிய வரும்!

prime-minister-s-security

பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குளறுபடிகள் தேசிய அளவில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. பாஜக நிர்வாகிகள் பலரும் இது குறித்துத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிலும்கூட சில தலைவர்களால் இது குறித்துக் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, சமூக ஊடகங்களில் இந்நிகழ்வு விவசாயிகள் போராட்டத்தின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்தே பிரதமரின் பயணங்களின்போது கருப்புக் கொடிகள் காட்டப்படுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதும் தொடரத்தான் செய்கின்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அடையாள நிமித்தமானவையேயன்றி பிரதமரின் பயணத் தடத்தில் குறுக்கிடுவது என்பதாகப் பொருள்கொள்ளப்பட்டதில்லை.

பிரதமரின் பஞ்சாப் பயணத்தில், வான்வழிப் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு சாலை வழியாக அவர் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. உரிய அவகாசத்தில் அவரது பயணத் தடத்தில் இருந்த சிக்கல்களை மாநில அரசு களைந்திருக்க முடியும். மாநில அரசு வேண்டுமென்றே தனது கடமையிலிருந்து தவறியதா என்பது தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள உயர்மட்டக் குழு விசாரணையில் தெரிந்துவிடும்.

பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. பாதுகாப்புக் குறைபாடுகள் மாநில அரசால் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவந்தால் அது மத்திய- மாநில அரசுகளின் உறவில் எத்தகைய விரிசலை உருவாக்கும், அரசமைப்புரீதியாக என்னென்ன நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதெல்லாம் சங்கடமான கேள்விகளாக நம் முன் நிற்கின்றன.

விவசாயிகளின் போராட்டத்தால் பிரதமரின் பயணத் திட்டம் கைவிடப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் சில பதிவுகள், இந்தியக் குடிமக்கள் தங்கள் அரசமைப்பின் மீது கொண்டிருக்கும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியரசுத் தலைவர் தொடங்கி உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வரை அனைவருமே இந்திய அரசமைப்பு என்னும் இயந்திரத்தின் முக்கியப் பாகங்களாக இயங்குபவர்கள். அவர்களை நோக்கிக் கேள்வியெழுப்பும் கருத்துரிமையையும்கூட அரசமைப்பின் வாயிலாகத்தான் பெற்றிருக்கிறோம்.

குடிமக்களாகப் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் அரசமைப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கடமையையும் உள்ளடக்கியதே. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இடையில், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் இடையில், சட்டமியற்றும் அவைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையில், நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையில் என எப்போதுமே முரண்பாடுகள் எழுவதும் அதையொட்டி விவாதங்கள் நடப்பதும் பின்பு ஒத்திசைந்து செல்வதுமாகத்தான் நமது அரசமைப்பு இயங்கிவருகிறது.

இதற்கான சாத்தியங்களை முன்னுணர்ந்தே எந்தவொரு அதிகாரமும் முழுமுற்றாக எவரிடத்திலும் ஒப்படைக்கப்படவில்லை. பிரதமர் தனக்கான அதிகாரத்தைப் பெற்றிருப்பது என்பது மக்களவையின் பெரும்பான்மையால்தான். மக்களவை என்பது பாஜக மட்டுமல்ல, எதிர்க்கட்சி, இன்ன பிற கட்சிகளையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் அனைவருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

பிரதமரின் முடிவுகள், அரசியல் நிலைப்பாடுகள், அவரது ஆட்சியில் இயற்றப்படும் சட்டங்கள் யாவும் விமர்சனங்களுக்கு உட்பட்டவையே. ஆனால், அவரின் பாதுகாப்போ தேசத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கக்கூடியது. அப்படியிருக்க, சொந்தத் தேசத்தில் நடுச்சாலையில் செய்வதறியாது பிரதமரின் அணிவகுப்பு நிற்பதும் அதன் பின்னணி தெரியாமலேயே சமூக ஊடகங்களில் வேடிக்கை செய்வதும் தேசத்தைப் பார்த்து உலக நாடுகளை சிரிக்கவும் வைக்கக்கூடியது!

பிரதமரின் பாதுகாப்புபிரதமர்Prime Minister's SecurityPrime MinisterSecurityஉயர்மட்டக் குழுவிசாரணை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x