Published : 07 Jan 2022 07:28 AM
Last Updated : 07 Jan 2022 07:28 AM

பெருந்தொற்று உயிரிழப்புகள்: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும்

ஆளுநர் உரையில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டுள்ளன. தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சமும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சமும் மாநில அரசால் நிவாரணமாக வழங்கப்படுவதும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயதில் வட்டியுடன் பெறும் வகையில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யும் திட்டத்தில் இதுவரையில் 287 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர் என்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக ரூ. 3 லட்சம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 7,513 குழந்தைகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக உயிரிழப்புகளைச் சந்தித்த அனைத்து குடும்பங்களுக்கும் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் இதுவரையில் 27,432 குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனாவுக்குப் பலியான அரசு மருத்துவர்களில் சிலரின் குடும்பத்துக்கு மட்டுமே தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்திலிருந்துதான் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநில அரசின் சார்பில் ரூ.50 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் பாதியே அளிக்கப்பட்டது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டே நிவாரணங்கள் வழங்க முடியும் என்பதே எதார்த்த நிலை. தொற்றுக்கு ஆளான முன்களப் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் மருத்துவர்களும் செவிலியர்களும் தொற்றுக்கு ஆளாவது தொடர்கிறது. எனினும், தற்போது அளிக்கப்பட்டுவரும் ஊக்கத்தொகையோடு அவர்கள் திருப்தியடைகின்றனர். தொற்றுப் பாதிப்புகளால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கியமான கோரிக்கை.

டிசம்பர் 27 நிலவரப்படி, கரோனா உயிரிழப்புக்கான ரூ.50,000 நிவாரணத்துக்கு இணையம் வழியாக 42,671 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு அவற்றில் 20,934 குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே மாநில அரசுகள் இந்த நிவாரணத் தொகையை வழங்கத் தொடங்கியுள்ளன.

இறப்புச் சான்றிதழில் கரோனா தொற்று எனக் குறிப்பிடப்படவில்லை என்பதால் நிவாரணத்தை மறுக்கக் கூடாது; தொற்றுக்குப் பிறகு 30 நாட்களுக்குள் இறந்தவர்களுக்கும் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்பட வேண்டியதும் அவசியம். அதே நேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவாகியுள்ள மொத்த இறப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக நிவாரண விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படவும் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x