Published : 03 Jan 2022 07:39 AM
Last Updated : 03 Jan 2022 07:39 AM

தமிழ்நாடு முதல்வரின் நூலக ஆய்வுகள்: வாசிப்புலகம் வளம்பெறட்டும்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியிலும் தஞ்சையிலும் நடந்த அரசு விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சைப் பயணத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க சரஸ்வதி மஹால் நூலகத்தில் மேற்கொண்ட ஆய்வு, வாசிப்பின் மீது ஆர்வம்கொண்ட அனைவருக்கும் ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை அளித்துள்ளது. சரஸ்வதி மஹால் நூலகத்தையும் அந்த வளாகத்தில் அமைந்துள்ள பழம்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்ட முதல்வர் நூலகத்தின் தேவை குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாத இறுதியில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். அதற்கு முதல் நாள் இரவே, அக்கட்டிடத்தில் சில ஆண்டுகளாக அச்சுறுத்திவந்த கதண்டுகள் தீயணைப்புப் படையினரின் உதவியால் உடனடியாக அகற்றப்பட்டன. போட்டித் தேர்வு தயாரிப்புக்காக அந்நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த நடவடிக்கை மிகப் பெரிய ஆறுதலை அளித்தது. காவல் நிலையம், மருத்துவமனைகள் போன்று நூலகங்களை நோக்கியும் தமிழ்நாடு முதல்வர் ஆய்வுகளை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியிருப்பது, பள்ளி நூலகங்களை ஒரு இயக்கமாக முன்னெடுத்திருப்பது, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முன்னோடித் தலைவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியிருப்பது, முக்கியமான சந்திப்புகளின்போது புத்தகங்களைப் பரிசளிப்பது, தான் கலந்துகொள்ளும் விழா மேடைகளிலும் புத்தகங்களையே பரிசாகப் பெறுவது, பரிசாகப் பெற்ற புத்தகங்களை நூலகங்களுக்குப் பகிர்ந்தளிப்பது என புத்தக வாசிப்பு குறித்த நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார் தமிழ்நாடு முதல்வர். அதன் ஒரு பகுதியாகவே தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக ஆய்வுப் பயணமும் அமைந்துள்ளது.

தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜியின் லட்சியக் கனவே சரஸ்வதி மஹால் நூலகம். அவரது காலத்தில் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த பல்துறை நூல்களைத் தருவித்துப் படித்து, அவற்றை இந்நூலகத்தில் சேகரித்துவைத்தார். வரலாறு, இசை, மருத்துவம், அறிவியல் தொடர்பிலான தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருத மொழி நூல்களும் ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளும் பல்லாயிரக்கணக்கில் இந்நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்நூலகத்தில் இருந்த அரிய தமிழ் நூல்களை மின்னூலாக்கம் செய்து, தமிழிணைய மின்னூலகத்தில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்றின் காரணமாக ஆய்வு நூலகங்களுக்குச் சென்று, தங்களது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர முடியாத ஆய்வாளர்களுக்கு இதுபோன்ற மின்னூலாக்கங்கள் மட்டுமே வாய்ப்பாக அமைந்துள்ளன. இந்தியாவுக்கு வெளியே கடல்கடந்து வாழும் தமிழர்களும் பழந்தமிழ் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை இத்திட்டத்தின் கீழ் பெற்றுவருகிறார்கள். இந்நிலையில், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் மின்னூலாக்கப் பணிகள் மேலும் வேகம் பெற வேண்டும் என்பது தமிழ் ஆய்வுலகின் நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x