Published : 27 Dec 2021 07:03 AM
Last Updated : 27 Dec 2021 07:03 AM
கர்நாடக மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு-2021 என்ற பெயரிலான மதமாற்றத் தடைச் சட்டம் மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் சமூகச் செயல்பாட்டாளர்களிடையேயும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. கர்நாடகச் சட்டமன்றத்தில் இச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுவிட்டாலும்கூட, மேலவையில் ஆளுங்கட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததன் காரணமாக உடனே விவாதிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மேலவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், பாஜகவுக்கு மேலவையில் மேலும் கூடுதலாக 5 இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 75 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக மேலவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை வருகின்ற ஜனவரி தொடக்கத்தில் 32-லிருந்து 37 ஆக அதிகரிக்க உள்ளது. எனவே, அடுத்த கூட்டத்தொடரிலேயே இந்தச் சட்ட முன்வடிவு விவாதத்துக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இச்சட்ட முன்வடிவில் அடங்கியுள்ள சில பிரிவுகளின் சட்டரீதியான செல்லும்தன்மை குறித்துக் கேள்வியெழுப்பும் செயல்பாட்டாளர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தயாராகிவருவதாகத் தெரிகிறது. சட்ட முன்வடிவு குறித்த அவர்களது ஆட்சேபனைகளில் முக்கியமானது, இதே போன்று குஜராத்தில் இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச்சட்டத்தில் வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு இடையிலான திருமணங்களைக் குறித்த சட்டப் பிரிவுகளுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது என்பதாகும். குஜராத் சட்டத்தில் தடைவிதிக்கப்பட்ட பிரிவுகளை எந்த மாற்றமும் இல்லாது கர்நாடக சட்டமன்றத்தில் இயற்றுவது முறையாகுமா என்ற கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள்.
இந்திய அரசமைப்பின் கீழான அடிப்படை உரிமைகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதும் குடிமக்களின் கருத்துரிமை மற்றும் சமய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இயற்றுகிற எந்தவொரு சட்டமாக இருந்தாலும் அடிப்படை உரிமைகளுக்கு மாறாக இருக்க முடியாது. அவ்வாறு இயற்றப்படுகிற சட்டங்கள் செல்லும்தன்மை கொண்டவை அல்ல. மாநில அரசுகளால் மதமாற்றத் தடைச் சட்டம் இயற்றப்படுகிறபோதெல்லாம் அரசமைப்பு நெறிகள் சார்ந்த இந்தப் பார்வை வலியுறுத்தப்பட்டுவருகிறது.
மேலவை விவாதத்துக்காகக் காத்திருக்கும் கர்நாடகத்தின் மதமாற்றத் தடைச் சட்டத்தின்படி, மதம் மாற விரும்புபவரும் அவரை மதம் மாற்றுபவரும் அது குறித்த தகவல்களை 30 நாட்களுக்கு முன்பே மாவட்ட நீதிபதிக்குத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்றமில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதே சுமத்தப்படுகிறது. சட்டரீதியான எதிர்விவாதங்கள் ஒருபுறமிருக்க, பன்மைத்துவப் பண்பாடு கொண்ட தனித்துவமான இந்தியத் துணைக்கண்டத்தில் மதம் மாறும் உரிமையை ஒருவருக்கு மறுதலிப்பது, நமது நீண்ட நெடிய கலாச்சாரத்துக்கு மாறானது. ஆசைகாட்டியும் அச்சுறுத்தியும் செய்யப்படும் மதமாற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தாங்கள் தவறான முறையில் மதம் மாற்றப்பட்டதாக யாரேனும் பின்னாளில் புகார் கொடுத்தால் மதம் மாற்றியவர்களுக்கு அது தனிநபராகவோ... அமைப்பாகவோ இருந்தாலும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஒருவர் தனது நம்பிக்கையின் பெயரில் மதம் மாறிக்கொள்வதில் அரசு தலையிடுவது சரியல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!