Published : 24 Dec 2021 07:11 AM
Last Updated : 24 Dec 2021 07:11 AM

பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை முறைகேடு: விரிவான விசாரணை தேவை!

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு அளித்துவரும் கல்வி உதவித்தொகைகள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் உயர் கல்வித் துறையை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தையுமே வெட்கித் தலைகுனிய வைப்பவை. 2011 தொடங்கி 2014 வரையிலான காலத்தில் ரூ.17 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, கல்லூரி முதல்வர்கள் மட்டுமின்றி, தொடர்புடைய அரசு அதிகாரிகளும் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். புகார் தெரிவிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டுமின்றி இத்தகைய முறைகேடுகள் அதற்கு முன்பும் பின்பும்கூட நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதும் அனுமானிக்கக் கூடியதே.

பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்படிப்புகளில் சேர்ந்துள்ள பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் உதவித்தொகைகள் சரியாகக் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. உதவித்தொகைகளைப் பெறுவதில் மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவர்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு, அவற்றை விரைந்து பெறுவதற்கான கண்காணிப்பு அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். ஆனால், உதவித்தொகைகளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலையில் இருக்கும் மாணவர்கள், அது கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் புகார் செய்தால் தங்களது படிப்பு பாதிக்கப்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர். இந்த அச்சத்தையே முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பது துயரமானது.

பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதிகளின் தங்கும் வசதிகளும் உணவு ஏற்பாடுகளும் திருப்திகரமான அளவில் இல்லை என்ற உண்மையைக் கல்வித் துறையில் உள்ள அனைவரும் அறிந்தே உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான விடுதிகளின் நிலையும்கூட அதே நிலையில்தான் இருக்கின்றன. ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களும்கூட தங்களுக்கான உதவித்தொகையைப் பெறுவதில் சிரமங்களை அனுபவித்துவருகின்றனர் என்று கல்வி நிறுவன வளாகங்களில் பேசப்படுகிறது.

ஆய்வு மாணவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகைகள் செலுத்தப்பட்டாலும் அந்த வங்கிக் கணக்குக்கான ஏடிஎம் அட்டைகளை ஆய்வு வழிகாட்டிகள் தங்கள் வசம் வைத்துக்கொள்கிறார்கள் என்றும்கூட பேசப்படுகிறது. பாதிக்கப்படும் மாணவர்களே நேரடியாகப் புகார் அளிக்காதவரையில், இத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதோ அவற்றுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதோ இயலாத ஒன்று. ஆனால், இத்தகைய புகார்கள் கல்லூரி முதல்வர்கள் மீதும் பேராசிரியர்கள் மீதும் வைக்கப்படுகின்றன என்பது அவர்கள் பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியர் பணிக்குப் பெருமை சேர்க்காது என்பது மட்டும் நிச்சயம்.

கடந்த காலத்தில் இத்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் புகார் தெரிவிக்க அனுமதித்து, விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையால் நடத்தப்பட்டுவரும் விசாரணையில், முறைகேட்டுக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது எடுக்கப்படும் துறைசார்ந்த மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் இனிமேலும் அத்தகைய இழிநிலை தொடராமல் இருப்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x