Published : 21 Dec 2021 06:41 AM
Last Updated : 21 Dec 2021 06:41 AM

பெண்ணின் திருமண வயது: கால மாற்றத்தை அங்கீகரிக்கும் சட்டத் திருத்தம்

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, சமூகச் செயல்பாட்டாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு வீதம், பிரசவ இறப்பு வீதம், தாய்-சேய் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே குறைந்தபட்சத் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரையை வழங்கியுள்ளது. இப்பரிந்துரையானது, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்பதும் பெண்கள் அதிகாரம் பெறுவதையும் பாலினச் சமத்துவத்தை எட்டுவதையுமே நோக்கங்களாகக் கொண்டுள்ளன என்பதும் முக்கியமானது. திருமண வயதை நீட்டிக்கும் அதே நேரத்தில், அதுவரையில் பெண் கல்விக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் ஜெயா ஜேட்லி குழு வலியுறுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து இந்து திருமணச் சட்டம், கிறித்துவத் திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் குழந்தைத் திருமணங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை வரையறுக்கும் சட்டப் பிரிவுகள் விரைவில் திருத்தங்களுக்கு உள்ளாகவிருக்கின்றன. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி குறைந்தபட்ச வயதை எட்டாதவர்களுக்குச் செய்துவைக்கும் திருமணங்கள் சட்டவிரோதமானவை. அவற்றை நடத்துபவர்கள் தண்டிக்கத் தக்கவர்கள்.

எனினும், அத்திருமணங்கள் செல்லத் தகாதவை அல்ல. குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சத் திருமண வயதை எட்டும்போது, திருமண உறவைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்கள். எனினும், குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறான திருமணம் என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில், குறைந்தபட்சத் திருமண வயதை எட்டும் வரையில் குழந்தைகளைப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கவும் உத்தரவிடலாம்.

பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குழந்தைத் திருமணங்கள் அதிகரித்தன. வேலையின்மையால் வருமான இழப்பைச் சந்திக்க நேர்ந்த ஏழைக் குடும்பங்கள், தங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்ததும் குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாகிவிட்டது. சட்டத் திருத்தங்களின் வழி திருமண வயதைக் கூட்டவிருப்பதால், இத்தகைய திருமணங்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது முக்கியமான கேள்வி.

18 வயதை எட்டுவதற்குள்ளேயே திருமணங்கள் நடத்தப்படுகிறபோது 21 வயது வரைக்கும் திருமணங்களைத் தள்ளிவைக்க வேண்டும் எனில், கண்காணிப்பும் நடவடிக்கைகளும் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். வாக்குரிமை வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்துவிட்ட நிலையில், திருமண வயதை 18-லிருந்து 21-க்கு நீட்டிப்பது பொருத்தமாக இருக்குமா என்ற கேள்வியின் தர்க்க நியாயங்களும் விவாதத்திற்குரியவை. கால மாற்றத்துக்கேற்பத் திருமண வயது நீட்டிக்கப்படுவது சரியானது என்பதே பெரும்பான்மை கருத்து. எனினும், இந்தக் கால மாற்றத்தைச் சமய வேறுபாடுகளின்றி அனைத்துச் சமூகங்களும் தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x