செமிகண்டக்டர் உற்பத்திக்கு ஊக்கத்தொகைத் திட்டம்: வரவேற்புக்குரிய முடிவு

செமிகண்டக்டர் உற்பத்திக்கு ஊக்கத்தொகைத் திட்டம்: வரவேற்புக்குரிய முடிவு
Updated on
1 min read

அடுத்து வரும் ஆறு ஆண்டுகளுக்கு அரைக் கடத்தி (செமிகண்டக்டர்) உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.76,000 கோடி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, தொழிற்துறையின் வளர்ச்சிக்குத் தொலைநோக்குடன் உதவக்கூடிய முக்கியமான முடிவாகும். அரைக் கடத்தி வடிவமைப்பில் ஈடுபடும் உலகளாவிய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிவந்தபோதிலும், அவற்றை உற்பத்தி செய்வதில் பற்றாக்குறை நிலையே நிலவிவருகிறது. மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தால், இப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பதால், இம்முடிவு வரவேற்புக்குரிய ஒன்று.

சிலிக்கான் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அரைக் கடத்திகளைக் கொண்டுதான் வாகனங்கள், மின்சாதனங்கள், இயந்திரங்களுக்குத் தேவைப்படும் சில்லு (சிப்) வடிவமைக்கப்படுகிறது. திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்), மடிக்கணினிகள் என அன்றாடப் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இந்த சில்லுத் தொழில்நுட்பத்தாலேயே இயங்குகின்றன. கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிவதும், மெய்நிகர் வகுப்புகளில் கலந்துகொள்வதும் புதிய இயல்புகளாக மாறியுள்ளன. இதனால், தகவல் தொடர்பு சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், மின்சாதனங்களின் தயாரிப்புக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களில் ஒன்றான சில்லு உற்பத்தியோ பொதுமுடக்கத்தின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அரைக் கடத்தி உற்பத்தியில் ஏற்பட்ட தேக்க நிலையானது அதன் தொடர்ச்சியாக வாகனத் தயாரிப்பு, மின்சாதனங்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வாகனத் தயாரிப்புத் துறையில் உற்பத்தி வெகுவாகக் குறைந்ததால் சென்னை போன்ற நகரங்களில் அத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழப்பையும் ஊதிய வெட்டுகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது. சில்லு உற்பத்தியில் ஏற்பட்ட சுணக்கத்தின் காரணமான இந்தப் பாதிப்புகள் அடுத்து வரும் ஆண்டுகளிலும் நீடிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும், பெட்ரோலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுவரும் இந்நாட்களில், அரைக் கடத்திகளின் தேவை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. சீனாவிலும் கொரியாவிலும் சில்லுகளின் உற்பத்தியில் தீவிரக் கவனம் செலுத்தப்பட்டுவரும் நிலையில், இந்தியாவும் அதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலின் ‘டவர் செமிகண்டக்டர்’, ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான ‘பாக்ஸ்கான்’, சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ‘கன்சார்டியம்’ போன்ற இத்துறையின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் சில்லுத் தொழிற்சாலைகளைத் தொடங்கும் விருப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. உள்நாட்டிலேயே சில்லுகளின் தயாரிப்புக்கு வாய்ப்பிருக்கும்பட்சத்தில் வாகனங்கள், மின்சாதனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

அரைக் கடத்திகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை உதவிகள் மட்டும் போதாது. மாநில அரசுகளின் ஆதரவும் முக்கியமானது என்பதையும் தொழில் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். சில்லுகளின் தொழிற்சாலைகளுக்குத் தடையில்லாத மின்சக்தி, அதிக அளவிலான நன்னீர், பெரும் பரப்பிலான நிலம் ஆகியவை அத்தியாவசியத் தேவைகள். தொழிற்சாலைகளிலிருந்து சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்தும் விரும்பப்படுகிறது. எனவே, சில்லுத் தொழிற்சாலைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கும் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in