

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை இந்திய ராணுவத் தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அப்பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கிராம மக்கள் செய்த உதவியை மறக்காமல் ராணுவம் நன்றி பாராட்டியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தாலும், விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் செய்த உதவி விலைமதிப்பற்றது என்று ராணுவ அதிகாரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தின்போது உதவிய தமிழகக் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தாலும், கிராம மக்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி, ராணுவ அதிகாரி அருண் நேரில் சென்று கிராம மக்களைப் பாராட்டி உணவு, உடை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, நஞ்சப்பசத்திரம் கிராமத்துக்கு மாதந்தோறும் மருத்துவர்களை அனுப்பி இலவச சிகிச்சை அளிப்பதாகவும், கிராம மக்கள் ஓராண்டுக்கு ராணுவ மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள் சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் தங்களால் முடிந்த உதவிகளை அந்தக் கிராம மக்களுக்கு செய்துதருவதாக உறுதி அளித்திருந்தாலும், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் நேரில் சென்று, எளிய கிராம மக்களை அமரவைத்து, நன்றி தெரிவிப்பது அன்பு மற்றும் மனிதநேயத்தின் உச்சம். ராணுவ அதிகாரிகளுக்கும் அந்தக் கிராமத்துக்கும் தொடர்பே இல்லாத நிலையில், ஒரு விபத்து அவர்களை இணைத்துள்ளது. தீயணைப்புத் துறை வாகனம்கூட போக முடியாத ஒரு மலைப் பகுதியில் விபத்து நடந்தபோது ஓடிச்சென்று தங்களிடம் இருந்த குடம், வாளி மூலம் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்து, தங்களிடம் உள்ள போர்வைகளை வழங்கி உதவியுள்ளனர்.
எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் கிராம மக்கள் காட்டிய அன்பும் மனிதநேயமும் அவர்களுக்குப் பன்மடங்காகத் திரும்பியுள்ளது. அன்பு மற்றும் மனிதநேயத்தின் வலிமையே இதுதான். சாதி, மதம், இனத்தின் பெயரால் பிரிவினைக் கருத்துகளும், வெறுப்பு விதைகளும் விதைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற மொழி, இனம், சாதி, மதம் கடந்த அன்பும், மனிதநேயமும்தான் மனிதகுலத்தைக் காக்கும். இன்றைய காலகட்டத்தின் தேவை, இதுபோன்ற மனிதநேயச் செயல்களே. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறரிடம் காட்டும் அன்பு பன்மடங்காகப் பெருகும்போது வெறுப்புப் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டு, நாட்டில் ஒற்றுமை அதிகரிக்கும்.