இரட்டைத் தலைமை: அதிமுக நடத்தும் அரசியல் பரிசோதனை

இரட்டைத் தலைமை: அதிமுக நடத்தும் அரசியல் பரிசோதனை
Updated on
1 min read

முன்னாள் முதல்வர்களான ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் முறையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றித் தேர்வாகியிருப்பது அக்கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் கட்சித் தலைமையில் மாற்றம் வருமா, அதிருப்தியடைந்தவர்களால் புதிய அணிகள் உருவாகுமா, அதிமுகவிலிருந்து விலகித் தனிக் கட்சி நடத்துபவர்கள் மீண்டும் இணைவார்களா, அவர்கள் தலைமையைக் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறதா என்பது போன்ற பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று தனிப்பெரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள் என்று யாரும் இல்லாத நிலையில் கட்சி தனது கட்டுப்பாட்டை இழந்து, தேர்தல் சின்னத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதே அதிமுகவைச் சேர்ந்த கடைக்கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. பன்னீர்செல்வம், பழனிசாமி இருவருமே கட்சியில் தங்களது இடங்களை விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை என்றாலும், ஒருவருக்கொருவர் எதிராக இல்லை என்பதைத் தொண்டர்களுக்குத் தற்போது உணர்த்தியிருக்கிறார்கள்.

தண்டனைக் காலம் முடிந்து, பெங்களூருவிலிருந்து சென்னைக்கு சசிகலா திரும்பியபோதும், தென்மாவட்டங்களை நோக்கி அவர் மேற்கொண்ட பயணத்தின்போதும் அதிமுகவின் தொண்டர்களில் சில தரப்பினரிடம் சிறு சலனங்கள் எழுந்தன. என்றாலும், அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலுவான ஒரு தலைமையின் கீழ் தங்களது விசுவாசத்தைத் தொடர்ந்து நிரூபித்தபடியே இருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டுவிட்டதை விரும்புகிறவர்களாக உள்ளனர்.

இதற்கு முன் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த காலங்களில், அவர்களை விடவும் அரசியலில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் அவர்களது தலைமையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். பன்னீர்செல்வம்- பழனிசாமி காலத்திலும் அவர்களை விடவும் மூத்த தலைவர்களும் சமகாலத்தவர்களும் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அதிருப்தி எழாதவரை, இரட்டைத் தலைமை சிக்கலின்றி தொடரும். அதே நேரத்தில், இந்த அதிருப்திக் குரல்கள் எழுவதைக் கட்டுப்படுத்துவதில் பன்னீர்செல்வம்- பழனிசாமி இருவருமே உறுதியுடன் இருப்பதை அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் மற்றவர்கள் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. கட்சியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர்கள் கட்சித் தலைமையைக் கைப்பற்றிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் வேகவேகமாக நடத்தி முடிக்கப்பட்ட தேர்தல், கட்சிப் பொறுப்புகள் குறித்த வழக்குகளை எதிர்கொள்வதற்கான வியூகம் என்ற பார்வைகளும் உண்டு.

ஒரே வாக்கில் இருவரைத் தேர்ந்தெடுக்கும் முறையும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. மொத்தத்தில், பன்னீர்செல்வம்- பழனிசாமியின் கூட்டுத் தலைமை கட்சிக்குள் தமது இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றிபெறும்பட்சத்தில், வருங்காலத்தில் மற்ற கட்சிகளுக்கும்கூட இது ஒரு முன்னுதாரணமாக அமையும். சட்டமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட வேண்டும் என்பதே வாக்காளர்களின் எதிர்பார்ப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in