கிரிப்டோ கரன்சி: சர்வதேச நாணய முறைக்கான காலத்தின் தேவை

கிரிப்டோ கரன்சி: சர்வதேச நாணய முறைக்கான காலத்தின் தேவை
Updated on
2 min read

கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர்ப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய சட்ட முன்வடிவு ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மெய்நிகர் பரிவர்த்தனைகள் தொடர்பாக நவம்பர் 13-ல் பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டம் இயற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முறைப்படுத்தப்படாத மெய்நிகர்ப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதச் செயல்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் களமாகிவிடக் கூடாது என்ற மத்திய அரசின் அச்சம் நியாயமானதே. அதே நேரத்தில், உலகளாவிய பரிவர்த்தனையில் மெய்நிகர்ப் பணப் பரிமாற்றங்களின் இடத்தை இனிமேலும் தவிர்க்கவோ மறுக்கவோ இயலாது என்ற எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரிசர்வ் வங்கியும் செபி அமைப்பும் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வை உருவாக்கிவருகின்றன. நடப்புக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவிருக்கும் புதிய சட்ட முன்வடிவு, முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கு உதவும். எனினும், கிரிப்டோ கரன்சியை அங்கீகரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் இப்படி ஒவ்வொரு நாடும் தனித்தனியாகச் சட்டங்களை இயற்றிக்கொண்டிருப்பது சரியான தீர்வாக இருக்க முடியாது. அனைத்து நாடுகளுமே கிரிப்டோ கரன்சியை அங்கீகரிக்கும் வகையில் பன்னாட்டு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். உலக வர்த்தக நிறுவனம் போன்ற பன்னாட்டு வர்த்தக அமைப்புகளும்கூட இது தொடர்பாக வழிகாட்டுதல்களை வழங்கலாம்.

பரிமாற்றங்களின் அலகாக நாணய மதிப்பு உருவான காலம் தொடங்கி, இன்று வரையிலும் பணவியல் பொருளியல் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்டிருக்கிறது. மதிப்புமிக்க உலோகங்களைக் கொண்டு நாணயங்களை வெளியிட்ட காலம் மாறி, அச்சிடப்பட்ட பணத்தாள்கள் இன்று உலகம் முழுவதுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. வணிக நடவடிக்கைகளில் நேரடிப் பணப் பரிமாற்றங்களின் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது.

மின்னணுப் பணப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும் இக்காலத்தில், மெய்நிகர்ப் பரிமாற்றங்களும் அறிவியல்ரீதியான ஒரு வளர்ச்சி நிலைதான் என்பதை அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்திருந்த தடையைச் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டதும் இங்கு சேர்த்து எண்ணத்தக்கது. பணவியல் பொருளியல் மீது தமக்கிருக்கும் முழுமுற்றான அதிகாரத்தை இழக்க நேருமோ என்ற மத்திய வங்கிகளின் சந்தேகமும் மெய்நிகர்ப் பணப் பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயக்கத்துக்குக் காரணமாக உள்ளது. மத்திய வங்கிகளின் கூட்டமைப்பால் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியும்.

நாடுகளின் எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் ஒரு பொது நாணய முறைக்கான தேவை எழுந்துள்ளது. அந்த வெற்றிடத்தை மெய்நிகர்ப் பணப் பரிமாற்றங்களால் நீக்க முடியும். ஆனால், மெய்நிகர்ப் பணப் பரிமாற்றங்களை உலக நாடுகள் அனைத்தும் ஒருசேர அங்கீகரிக்காமல் அது சாத்தியமில்லை. உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்துடன் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது. அதே நேரத்தில் வருமான வரி ஏய்ப்பு, கறுப்புப் பணப் புழக்கம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி போன்றவற்றுக்கு இதுபோன்ற பணப் பரிவர்த்தனை பயன்படுத்தப்படுவதைத் தடுப்பது எப்படி என்பதையும் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in