நிறைவேறட்டும் மகளிர் மசோதா!

நிறைவேறட்டும் மகளிர் மசோதா!
Updated on
2 min read

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் வரும்போதெல்லாம் ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’வை நினைவுகூர்ந்து பேசுவது என்பது வழக்கமாகிவிட்டது.

நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கென்றே ஒதுக்க வழி செய்யும் அரசியல் சட்டத்தின் 108-வது திருத்த மசோதாவுக்கு மீண்டும் உயிர் கொடுங்கள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் மகளிர் தினத்தன்று அழைப்பு விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இக்கோரிக்கையை எதிரொலித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக எதுவுமே சொல்லாதது குறிப்பிடத் தக்கது,

ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி போன்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே இந்த மசோதா மக்களவையில் நிறைவேறாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 2010 மார்ச்சில் மாநிலங்களவையில் இது நிறைவேறியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜகவுக்கும் இடையில் இருந்த புரிதல் காரணமாக மாநிலங்களவையில் இது சாத்தியமானது. இப்போது மக்களவையில் பாஜக-வுக்குப் பெரும்பான்மை வலு இருக்கிறது. அத்துடன் அதற்கு உதவ தோழமைக் கட்சிகளும் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் ஒத்துழைத்தால் இது நிறைவேறுவது எளிது.

இந்த மசோதா நிறைவேறினால் முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்தான் தேர்தலில் அதிகம் போட்டியிடுவார்கள், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் போட்டியிட முடியாது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இப்படி முட்டுக்கட்டை போடுவதன் பின்னணியில் இருப்பது சமூக நீதி பற்றிய அக்கறை என்பதைவிட, ஆணாதிக்கச் சமுதாயத்தின் ஆணவம் என்பதே உண்மை.

இந்த மசோதாவில்கூட சாதிவாரியான இடஒதுக்கீடு அல்லது சமுதாய ரீதியிலான இடஒதுக்கீடு கொண்டுவந்தால் ஆதரிக்கத் தயார் என்று இதை எதிர்ப்போர் கூறுகின்றனர். மகளிருக்கு இடங்களை ஒதுக்கும் மசோதாவைக் கொண்டுவந்தால் ஏற்கெனவே அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் சில கட்சிகளின் தலைவர்களுடைய குடும்பத்தினரே அதிகம் போட்டி போடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாகவும் இருக்கலாம். இப்போது ‘வாரிசு அரசியல்’ என்பது ‘குடும்ப அரசியலாக’ப் பரிணாமம் பெற்று வருகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது சட்ட மன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ மகள், மருமகள், பேத்தி என்று பலரும் போட்டி போடுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் கடந்து பெண்கள் சாதிக்க வாய்ப்பளிப்பது மிக முக்கியமானது.

இந்த மசோதாவை இப்படியே கிடப்பில் போடுவதற்குப் பதிலாக இதை நிறைவேற்றுவதற்காக விவாதம் நடத்தி, அனைத்து தரப்பாரின் கவலைகளையும் மனதில் வாங்கி அவற்றைக் களையும் வகையில் திருத்தங்களைச் செய்யலாம். மகளிருக்கான தொகுதிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழல் முறையில் மாற்றியும் அனைத்துப் பகுதி பெண்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். அவ்வளவு ஏன், மகளிருக்கு இடம் தருவதற்காக இரட்டை உறுப்பினர் தொகுதிகள், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் கட்டாயம் இத்தனை சதவீதப் பெண்களைச் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதிகள் மூலம் ஆணை என்று மாற்று வழிமுறைகளைக் கூட பரிசீலிக்கலாம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காக மகளிர் மட்டுமல்ல, ஆண்களும் அக்கறையுடன் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in