Published : 19 Nov 2021 03:07 am

Updated : 19 Nov 2021 08:39 am

 

Published : 19 Nov 2021 03:07 AM
Last Updated : 19 Nov 2021 08:39 AM

அரசை விமர்சிப்பவர்களை அமைதிப்படுத்துகிறதா திமுக?

critics-of-the-state

ஆளுநர் உரையில் அறிவித்தபடி, சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. ஓய்வுபெற்ற ஆட்சிப் பணித் துறை அதிகாரியும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் திட்டப் பிரிவு கூடுதல் செயலாளராகப் பணியாற்றியவருமான வெ.திருப்புகழ் நியமிக்கப்பட்டிருப்பது பொருத்தமானது. இந்த அறிவுரைக் குழுவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஜனகராஜனும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நீர் மேலாண்மையில் அரசுகளின் தவறான அணுகுமுறைகளைத் தொடர்ந்து கவனப்படுத்தியும் அவற்றின் விளைவுகள் குறித்து எச்சரித்தும்வருபவர் எஸ்.ஜனகராஜன். திமுக அரசால் நியமிக்கப்பட்டுவரும் இத்தகைய குழுக்களில் அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களும்கூட இடம்பெற்றுவருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.

நீட் தேர்வின் மூலமாக மருத்துவச் சேர்க்கை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவில் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போன்றோரின் உரிமைகளுக்காகப் போராட்டக் களத்தில் நிற்பவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத். மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையைக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கியவர் எல்.ஜவஹர்நேசன். இடதுசாரிக் கருத்துப் போக்குக் கொண்டவர்களான இவர்களைத் திமுக தலைமையிலான அரசு அரவணைத்துக்கொண்டுவிட்டது.

தமிழக அரசு நியமித்திருக்கும் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் அறிவிக்கப்படாத கொள்கைபரப்புச் செயலாளராக அவர் செயல்பட்டுவருகிறார் என்றாலும்கூட சமூகநீதிக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாற்றை இளைய தலைமுறைக்கு நினைவுபடுத்திக்கொண்டிருப்பவர் அவர். சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்தும் இடம்பெற்றுள்ளார். மருத்துவத் துறையில் நடக்கும் தவறுகளைக் கண்டித்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருப்பவர் அவர். அரசு மருத்துவர்களின் ஊதிய நிர்ணயங்கள் குறித்த பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக இன்னும் கனன்றுகொண்டிருக்கும்போது அதற்காகப் போராடும் மருத்துவர்களை அரசுக் குழுக்களில் நியமிப்பதைக் குறித்து சந்தேகங்கள் எழுவது இயல்பானதே.

சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவில் கவிஞர் மனுஷ்ய புத்திரனும் இடம்பெற்றுள்ளார். அவர் திமுக உறுப்பினரும்கூட. இதேபோல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை அரசு நியமிக்கும் குழுக்களில் உள்ளடக்கிக்கொள்வது ஆரோக்கியமான ஒன்றுதான். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக ‘தலித் முரசு’ இதழின் ஆசிரியரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான புனித பாண்டியன், இலங்கைத் தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினராக பத்திரிகையாளர் கோவி.லெனின் என்று நியமனங்கள் தொடர்கின்றன. களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்களிடமிருந்து நல்ல ஆலோசனைகளைப் பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த அரசு தயாராக இருக்கிறது எனில், அது வரவேற்கத்தக்கது. அரசியல் அரங்கத்தில் அதிர்வலைகளை எழுப்பும் அவர்களை அரசு நியமிக்கும் குழுக்களில் உள்ளடக்கி அமைதிப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துவிடக் கூடாது என்பது முக்கியம்.

ஆடியோ வடிவில் கேட்க:
அரசை விமர்சிப்பவர்கள்திமுகCritics of the state

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x