தூக்கியெறியப்படுவீர்கள்!

தூக்கியெறியப்படுவீர்கள்!
Updated on
2 min read

தஞ்சை மாவட்டத்தில் டிராக்டர் கடனுக்கு கடைசி இரு தவணைகளைச் செலுத்தாத ‘குற்றத்துக்காக’ ஒரு விவசாயியைத் தனியார் நிதி நிறுவன ஊழியர்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் கண்மூடித்தனமாகத் தாக்கி, இழுத்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. டிராக்டரிலிருந்த விவசாயியை ஏறித் தாக்கி, கீழே இழுத்து, ஊர் மக்கள் மத்தியில் அவரை சட்டையைப் பிடித்துத் தரதரவென இழுத்தும், பூட்ஸ் காலால் உதைத்தும் கைதுசெய்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள் போலீஸார். தனியார் நிதி நிறுவனமோ அந்த டிராக்டரைப் பறிமுதல் செய்திருக்கிறது.

தனியார் நிதி நிறுவனங்கள் கூலிக்கு ஆட்களை நியமித்து, அடித்தும், மிரட்டியும் கடனை வசூலிப்பதை உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கும் சூழலில், இங்கே தனியாரின் அடியாளாக தமிழகக் காவல் துறையே களமிறங்கியிருப்பது தமிழக அவலம். வீடியோவில் ஆவேசமாக வெளிப்படும் “அசிங்கப்பட்டுப்போயிடுவ” என்ற மிரட்டல் குரல் ஒரு விவசாயியை நோக்கி ஒரு போலீஸ் அதிகாரி சொல்லும் குரலாக இல்லை; ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் நோக்கி இந்த அமைப்பு குரலாகவுமே வெளிப்படுகிறது.

இன்னொரு செய்தியும் அதே நாளன்றுதான் வெளியாகி யிருக்கிறது. வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் வாங்கிவிட்டு திரும்பிச் செலுத்தாமல் ஏமாற்றிவரும் தொழிலதிபர் விஜய் மல்லையா எல்லோர் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, சகல மரியாதையுடன் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

டிராக்டருக்கான மொத்த கடன் ரூ.3.8 லட்சம். மல்லையாவுக்கு வங்கிகள் கொடுத்திருக்கும் கடன்களின் பட்டியல் இது: பாரத ஸ்டேட் வங்கி ரூ.1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ. 800 கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.800 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ரூ.650 கோடி, பேங்க் ஆஃப் பரோடா ரூ.550 கோடி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.430 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.410 கோடி, யூகோ பேங்க் ரூ.320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி ரூ.310 கோடி, ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் ரூ.150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ரூ.140 கோடி, ஃபெடரல் பேங்க் ரூ.90 கோடி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ரூ.60 கோடி, ஆக்சிஸ் வங்கி ரூ.50 கோடி!

மல்லையாவுக்குக் கடன் கொடுத்த வங்கிகள், “அவர் நாட்டைவிட்டுத் தப்பும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவரைக் கைதுசெய்வதுடன் பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும்” என்ற மனுவுடன் நீதிமன்றங்களுக்கு இடையே அலைந்துகொண்டிருந்த நாட்களிலேயேதான் மல்லையா வெளியேறியிருக்கிறார். எப்படி இது அரசுக்குத் தெரியாமல் நடந்தது? ஏன் அவர் தடுத்து நிறுத்தப்படவில்லை?

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ.94,666 கோடி அதிகரித்து, ரூ. 3.61 லட்சம் கோடியாகியிருக்கிறது. இதில் பெரும் பகுதி கடன்கள் மல்லையா போன்ற முதலைகள் அரசியல் பலத்தினால் வாங்கியவை. எங்கே கைகளை உயர்த்த வேண்டுமோ, அங்கே கை கட்டி நிற்கும் அமைப்புதான், அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் சில தவணைகளைத் தவறவிடும் விவசாயிகள் கடன் பிரச்சினையில் தனியார் நிறுவனங்களுக்கு ஆயுதமாக மாறி நிற்கிறது.

மனசாட்சியுள்ள ஒரு அரசாங்கம் இவை இரண்டிற்காகவும் வெட்கப்பட வேண்டும்! அமைப்பை மாற்றுங்கள் அல்லது மக்கள் உங்களைத் தூக்கியெறிவார்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in