

மியான்மரின் புதிய அதிபராக யு தின் யாவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அந்நாட்டின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு. 1962-ல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதற்குப் பிறகு, பெருமளவுக்கு ஜனநாயகத் தன்மையுள்ள அரசு என்றால், அது இப்போது பதவியேற்கவிருக்கும் தின் யாவின் அரசுதான். ராணுவ ஆட்சியில் மக்களுடைய அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டன. சர்வதேச அரங்கிலும் மியான்மர் தனிமைப்பட்டிருந்தது. இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு ஆட்சியின் கீழ் அது வரப்போவது மகிழ்ச்சியான தருணம்.
ஆனால், மியான்மர் மக்கள் கொஞ்சம் துயரம் கலந்த மனநிலையில்தான் இதை அணுகுகிறார்கள். ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு பதவியில் அமரப்போகிறது என்ற வகையில் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சிக்குக் காரணகர்த்தராக விளங்கும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சியால் நாட்டின் அதிபராகப் பதவியேற்க முடியாது என்பதுதான் துயரத்துக்கான காரணம். அவருடைய புதல்வர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் மியான்மரில் உயர் பதவியை வகிக்க முடியாது, மியான்மர் சட்டப்படி. ஆங் சான் சூச்சியைக் குறிவைத்து ராணுவ ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் இது.
மியான்மரின் இப்போதைய அரசியல் சட்டப்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் கால்வாசி இடங்கள் ராணுவத்துக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவைப்படும் பெருவாரியான வாக்குகளை ராணுவத்தின் ஒத்துழைப்பின்றித் திரட்ட முடியாது. எனவே, ஆங் சான் சூச்சியால் இப்போதைக்கு அதிபர் ஆக முடியாது. எனவே, பொருளாதாரம் படித்தவரும் எழுத்தாளருமான தின் யாவை அதிபர் பதவிக்குத் தேர்வுசெய்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே சூச்சிக்கு அறிமுகமானவர் அவர். அதிபராக தின் யாவ் பதவி வகித்தாலும், ஆட்சியில் சூச்சி முடிவுகளைத் தீர்மானிப்பவராக இருப்பார்.
புதிய அரசு பல சவால்களை எதிர்கொள்கிறது. பொருளாதாரரீதியாக நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறது. தொழில், வர்த்தகம் வளரவில்லை. விவசாயமும் பிரமாதமில்லை. லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். மத, இன மோதல்கள் அதிகம். அதிபராக தின் யாவ் இருந்தாலும் ராணுவம், உள்துறை, எல்லைப்புற விவகாரங்கள் என்ற 3 துறைகளுக்கு பர்மிய ராணுவம் யாரை நியமிக்கிறதோ அவர்கள் மட்டும்தான் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியும். நாட்டின் முக்கியமான பல நிறுவனங்கள் ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுபவை. பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் மிந்த் ஸ்வீயைத் துணை அதிபர் பதவிக்கு ராணுவம் பரிந்துரைத்திருக்கிறது.
ஆக, புதிய அரசுக்கு வெளியே இருக்கும் சவால்களைக் காட்டிலும் பெரிய சவாலாக இருக்கப்போவது அரசுக்குள் உட்கார்ந்திருக்கும் ராணுவம்தான். எனினும், மக்களிடம் முழு ஆதரவு இருந்தால் படிப்படியாக எல்லாவற்றையும் மாற்ற முடியும். மக்களால் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் முழுமையாக ருசிக்க முடிந்தால், ஊழலற்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட அரச நிர்வாகம் அவர்களுக்கு அளிக்கப்பட்டால் அது சாத்தியம்தான். ஆங் சான் சூச்சியும் தின் யாவும் அதைச் சாத்தியமாக்க வேண்டும்!