Published : 08 Nov 2021 01:09 AM
Last Updated : 08 Nov 2021 01:09 AM

சென்னையில் தொடர்மழை உணர்த்தும் பாடங்கள்...

சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு தொடர்ந்து பெய்த மழையால் மாநகரத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில், தேங்கி நிற்கும் தண்ணீரில் கழிவுநீரும் கலந்துள்ளது. சில பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுவிட்டன. பொழுது விடிவதற்குள் சென்னையின் முன்னாள் மேயரும் இந்நாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கூவம் ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நிலைமை சீராவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று ஆறுதல்கொள்ள நேர்ந்தாலும், பருவநிலை மாற்றங்களின் எதிர்பாராத பாதிப்புகள் குறித்து இன்னும் நாம் போதுமான அளவில் திட்டமிடவும் செயல்படவும் இல்லை என்பதையே இந்த ஒருநாள் இரவு பெய்த மழை உணர்த்தியிருக்கிறது.

2015-க்குப் பிறகு, சென்னையில் பெய்திருக்கும் பெருமழை இது என்று கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அதே அளவு கனமழை பொழியவில்லை. பல இடங்களில் தொடர்ச்சியான தூறலும் லேசான மழையும்தான் பெய்துள்ளன. தண்ணீர் தேங்கியிருப்பதற்கான முக்கியமான காரணங்களில், மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதும் வாய்க்கால்களின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை என்பதும் உள்ளடக்கம். பருவமழைக் காலம் என்று முன்கூட்டியே திட்டமிட்ட காலமெல்லாம் அநேகமாக முடிந்துவிட்டது. எதிர்பாராத பெருமழைகளை ஆண்டின் எந்த மாதத்திலும் சந்திக்க நேரிடலாம் என்பதையே கேரளம் தொடங்கி, உலகளாவிய இயற்கைப் பேரிடர்கள் அனைத்தும் உணர்த்துகின்றன. ஆனாலும், நம்முடைய திட்டமிடல்கள் பருவமழைக் காலங்களை மட்டுமே கருத்தில் கொள்வதாகவும் எதிர்பாராத பெருமழைகளைக் கருத்தில் கொள்ளாததாகவுமே இருக்கின்றன. மாறிமாறி எந்த அரசு வந்தாலுமே பாதாளச் சாக்கடைகளையும் மழைநீர் வடிகால்களையும் பராமரிப்பதில் மேல்பூச்சான வேலைகள்தான் நடக்கின்றனவேயொழிய அடைப்புகள் முழுமையாக நீக்கப்படுவதும் பணிகள் முழுமையாக நடைபெறுவதும் இல்லை என்பதுதான் உண்மை.

சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகள் தங்களது கொள்ளளவை எட்டிவிட்டன. அதன் காரணமாக, முன்னறிவிப்புடன் நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. அறிவிப்புகள் இன்றி மாநகர எல்லைக்குள் ஓடும் ஆறுகளில் தண்ணீரை வெளியேற்றி, அதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளான அனுபவங்கள் இனி எப்போதும் அமையாது என்று நம்புவோம். ஆனால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செல்லும் மழைநீர் வடிகால்களிலிருந்து தண்ணீர் ஆற்றுக்குள் இறங்குவதில்லை. எனவே, தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது மேலும் சிக்கலாகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்குவதோடு சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயங்களும் காத்திருக்கின்றன. அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நிலைமை ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும். என்றாலும், அரசின் திட்டமிடல்கள் எதிர்பாராத பெருமழைகளையும் எப்போதும் கணக்கில்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x