Published : 03 Nov 2021 03:07 AM
Last Updated : 03 Nov 2021 03:07 AM

கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை ஏன் தவிர்க்கக் கூடாது?

தமிழ்நாட்டில் மட்டும் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்காக ஏறக்குறைய 60 லட்சம் பேர் காத்துக்கொண்டுள்ளனர். இரண்டாவது தவணைக்கான காலக்கெடுவைக் கடந்தவர்களும் இதில் உள்ளடக்கம். காலக்கெடுவைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் இரண்டாவது தவணையைப் போட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும், அதைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாலே முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிடும் என்ற தவறான அபிப்பிராயங்களும் அதற்கு ஒரு காரணம். தவிர, தடுப்பூசியால் சிலருக்குக் காய்ச்சல் ஏற்படுகிறது என்பதும் அதைத் தவிர்ப்பதற்கு ஒரு காரணமாகிறது.

இரண்டாவது தவணையை எடுத்துக்கொள்ளும் வரை முதல் தவணை தடுப்பூசி நோய் எதிர்ப்புத் திறனை வழங்குகிறது. எனவே, இரண்டாவது தவணைக்குத் தாமதம் ஏற்பட்டாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாது; ஆறு மாதங்கள் வரையிலான தாமதங்களிலும் தடுப்பூசியின் நோய் எதிர்ப்புத் திறன் திருப்திகரமாகவே உள்ளது என்று நோய்த் தடுப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டிவருகிறார்கள். எனினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இரண்டாவது தவணையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான பரிந்துரையாக உள்ளது.

இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் இறப்பு வீதம் பல்வேறு காரணங்களுக்காக 4% ஆக இருக்கும் நிலையில், முதல் தவணை எடுத்துக்கொண்டவர்களின் இறப்பு வீதம் 9% ஆக இருக்கிறது என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் எச்சரிக்கை கருத்தில் கொள்ளத்தக்கது. கரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்தவர்களில் 89% பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பது அதைக் காட்டிலும் முக்கியமான எச்சரிக்கை. தமிழ்நாட்டில் தற்போது இரண்டாவது அலை கட்டுக்குள் வந்துவிட்டாலும் இந்த ஆண்டின் இறுதியில் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தடுப்பூசியின் முதல் தவணையை அனைவரும் உடனடியாகப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். அதைப் போலவே, இரண்டாவது தவணைக்கான காலக்கெடுவைக் கடந்திருந்தாலும் அதை மேலும் தாமதிக்காமல் போட்டுக்கொள்ள வேண்டியதும் முக்கியமானது.

வாரந்தோறும் நடத்தப்பட்டுவரும் சிறப்புத் தடுப்பூசி முகாம்களில் இரண்டாவது தவணையின் காலக்கெடுவைத் தாண்டியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுவருகிறது. இன்னும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மட்டுமின்றி, இரண்டாவது தவணை தாமதமானவர்கள் பட்டியலையும் தயாரித்து, அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் இதில் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்துமாறும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளார். பரந்த அளவில் நோய் எதிர்ப்புத் திறனை வளர்த்தெடுக்க வேண்டும் எனில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டியது அவசியம். அதிலும், இரண்டு தவணைகளும் போடப்பட்டால் மட்டுமே முழுமையான நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x