Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

உள்ளூர்த் தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டிய நேரமிது

பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய ‘மனதின் குரல்’ உரையில், தீபாவளி உள்ளிட்ட விழா நாட்களையொட்டி உள்ளூர்த் தயாரிப்புகளை வாங்கி கைவினைஞர்களையும் நெசவாளர்களையும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, இந்தியர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அறிவுரை இது. கரோனா பெருந்தொற்றின் காரணமாக உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் வங்கப் பிரிவினையின்போது உருவான சுதேசி இயக்கத்தைப் போல மீண்டும் ஒரு சுதேசி இயக்கத்தைக் கையிலெடுக்க வேண்டிய கால நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறோம். அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர்த் தயாரிப்புகளை ஆதரிப்பதும் அமையட்டும்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு, நவீனத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மின்சாதனங்கள் பலவற்றையும் குறைவான விலையில் வாங்கக்கூடிய சூழலைப் பெற்றிருக்கிறோம். கட்டற்ற சந்தை அமைப்பால் கிடைத்திருக்கும் வாய்ப்பு அது. உலகின் எங்கோ ஒரு மூலையில் உற்பத்தியாகும் பொருட்கள் நம்முடைய தினசரி புழங்குபொருட்களாகிவிட்டன. இன்னொரு பக்கம், இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறையின் முதலீட்டுப் பற்றாக்குறைகள் அந்நிய நேரடி முதலீடுகளாலேயே ஈடுகட்டப்பட்டுவருகின்றன. இந்திய முதலீடு என்பதைக் காட்டிலும், இந்தியத் தயாரிப்பு என்பதற்கே நாம் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகள், தற்சார்பு நிலையை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

காலம்காலமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டுவரும் சமயம் சார்ந்த விழாக்கள் அனைத்துமே உள்ளூர் அளவில் கைவினைக் கலைஞர்களிடம் பண்டமாற்றுகளையும் பரிவர்த்தனைகளையும் செய்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. எந்தவொரு விழாவிலும் அவர்களே முதன்மை நிலையை வகித்தார்கள். நவீன வாழ்க்கையின் அதிவேகப் போக்கு, அந்த மரபான வழக்கங்களில் சில இடைவெளிகளை உருவாக்கிவிட்டது. உணவு, உடை என எதிலும் தன்விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கிவிட்டோம். பொது முடக்கத்திலும் பகுதி முடக்கத்திலுமாகக் கடந்து வந்த ஒன்றரை ஆண்டு, தன்விருப்பங்களைக் காட்டிலும் உள்ளூர் அளவிலான பொருளியல் தற்சார்பு நிலையின் முக்கியத்துவத்தைப் புரியவைத்திருக்கிறது.

கடந்த ஜூலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துறைசார் ஆய்வுக்கூட்டம் ஒன்றில், அரசு ஊழியர்கள் வாரம் இரு நாட்கள் கைத்தறி அணிவதற்கான நடைமுறைகளை உருவாக்குமாறு அறிவுறுத்தினார். இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை. அதே கூட்டத்தில், சந்தையில் தரமான பனைவெல்லம் கிடைக்கும் வகையில் மாவட்டம்தோறும் பொதுப் பயன்பாட்டு மையங்களை நிறுவிடவும் அறிவுறுத்தினார். தற்போது ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகள், கைவினைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரை ஆதரிப்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரது கடமையும்கூட. இந்தியப் பிரதமரும் அதைத்தான் தனது உரையில் வலியுறுத்தியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x