

தீபாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது. புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. பண்டிகை நாளையொட்டி கடைகள் திறந்திருக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், கரோனா பெருந்தொற்றிலிருந்தும் அது குறித்த அச்சங்களிலிருந்தும் சற்றே மீண்டுவந்திருக்கிறோம் என்பது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில், கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பெற்ற பாடங்களையும் மறந்துவிடக் கூடாது.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது கடைவீதிகளில் மக்கள் கூட்டம் திரண்டது. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கடைத்தெருக்களை ஆய்வுசெய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்கினார்கள். அப்போதும்கூட முகக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பரலாகச் சென்றுசேரவில்லை. கரோனா முன்தடுப்பு விதிமுறைகளை அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்காத நிலையில், இரண்டாவது அலையையும் அதன் காரணமாகக் கடுமையான பாதிப்புகளையும் சந்தித்து மீண்டுவந்திருக்கிறோம். எனினும், இன்னமும்கூடத் தொற்றுப் பரவல் முழுதாக நீங்கிவிடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது என்றபோதும் இன்னும் அது பூஜ்ஜியமாகிவிடவில்லை. தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை அரசு ஒரு இயக்கமாகவே நடத்திவரும் நிலையிலும் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்டவர்கள் 29% மட்டும்தான். இரண்டு தடவை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உயிரிழப்பு அபாயங்கள் இல்லையென்றாலும், அவர்களும் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. அவர்களின் வழியே தடுப்பூசி போடாதவர்களுக்குத் தொற்று பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.
கரோனா வைரஸின் உருமாறிய வடிவமான ‘டெல்டா’, மேலும் உருமாற்றம் அடைந்து ‘டெல்டா பிளஸ்’ என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உருமாறிய வைரஸின் பரவல் பிரிட்டனில் அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளவர்களுக்கு இதனால் பாதிப்புகள் வராது என்று கூறப்பட்டாலும் வெகுவிரைவிலேயே மூன்றாவது தவணை தடுப்பூசியும் பரிந்துரைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சீனாவில் மீண்டும் கரோனா பரவலையடுத்து லான்சோ நகர் துண்டிக்கப்பட்டு அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் சீனாவிலும் நிலவிவரும் அச்சம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக முன்னிற்கிறது.
பண்டிகைக் காலங்களில் கடைவீதிகளில் மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்துவதே சவாலாக இருந்துவரும் நிலையில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம். குறைந்தபட்சம், பொருட்களை வாங்குவதற்காகக் கடைகளுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, கடைகளின் ஊழியர்களும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். கடைகளின் உரிமையாளர்கள் அதை வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் கடைகளுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பொதுமக்களிடம் உருவாக வேண்டும். கரோனாவிடமிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வதற்கான எளிமையானதும் வலிமையானதுமான ஆயுதம் முகக்கவசம் மட்டும்தான்.