தமிழ்நாடு மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடிக்கப்படுவது என்று முடிவுக்கு வரும்?

தமிழ்நாடு மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடிக்கப்படுவது என்று முடிவுக்கு வரும்?
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையால் கைதுசெய்து சிறைவைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களும் இன்னும் பத்து நாட்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற அந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த அக்டோபர் 13-ம் தேதி இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களது இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் விடுதலை குறித்து செய்திகள் வெளியான அடுத்த நாளிலேயே, கோட்டைப்பட்டினம் விசைப்படகுத் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகை இலங்கைக் கடற்படை, கப்பலை விட்டு மோதிக் கவிழ்த்துள்ளது. படகில் பயணித்த இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இன்னொருவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தமிழ்நாடு மீனவர்களின் நடுக்கடல் துயரங்கள் என்றுதான் முடிவுக்கு வரும் என்ற கவலையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே குரல்கொடுத்தன. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சினையில், பிரதமர் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்துடனேயே தமிழ்நாட்டு மீனவர்கள் கடலுக்குள் இறங்கும் நிலையைக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த காலத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் கைதாகும்போது எல்லைப் பாதுகாப்பும் கண்காணிப்பும் ஒரு முக்கியமான காரணமாகக் கூறப்பட்டது. அந்தக் காலகட்டம் முடிந்துவிட்டது. இப்போதும் நடுக்கடல் கைது சம்பவங்கள் தொடர்வதற்கு மீன்வளங்கள் குறையக்கூடும் என்ற இலங்கை மீனவர்களின் அச்சமே முதன்மையான காரணம். இருநாட்டு மீனவர்களிடையே முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைப் போல மீண்டும் நடத்தி, அவர்களின் குறைகளைக் கேட்டு சுமுகமான தீர்வுகளை எட்ட வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடிக் கவனம் செலுத்தும்பட்சத்தில் அது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரும் நடுக்கடலில் கைதுசெய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட அதே காலகட்டத்தில்தான் இந்திய - இலங்கை ராணுவப் படைகள் தங்களது எட்டாவது கூட்டுப் பயிற்சியை இலங்கையில் நடத்திக்கொண்டிருந்தன. அருகமை நாடுகளான இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு விஷயத்தில் ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டியவை. தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் இந்திய-இலங்கை உறவிலும் தாக்கங்களைச் செலுத்தக்கூடும் என்றாலும் இரண்டு நாடுகளின் நட்புறவு நெருக்கமானது. தவிர்க்கவியலாதது. இந்நிலையில், தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட குரலுக்குச் செவிசாய்த்து மீனவர்களின் அச்சத்தை நிரந்தரமாகப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in