காஷ்மீர் விவகாரத்தில் நம்பிக்கைக் கீற்று

காஷ்மீர் விவகாரத்தில் நம்பிக்கைக் கீற்று
Updated on
2 min read

நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான நிலங்கள் சிலவற்றில் தற்போது அரசியல் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், உத்ராகண்ட் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவற்றில் காஷ்மீர் பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே பிரிவினைவாதிகளின் செல்வாக்கைத் தடுக்கவும் மக்களைச் சாந்தப்படுத்தவும் 25 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாயைச் செலவிட்டதுடன் நூற்றுக்கணக்கான வீரர்களின் உயிர்களையும் பலிகொடுத்து வந்திருக்கிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி.) தலைவர் முப்தி முகம்மது சய்யீத் மறைவுக்குப் பிறகு, காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் தொடர்கிறது. புதிய அரசு அமைப்பது குறித்து முப்தியின் மகள் மெஹ்பூபாவுடன் பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. புதிய நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று மட்டும் ராம் மாதவ் தெரிவித்தார். இந்நிலையில் மெஹ்பூபா முப்தி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து அரை மணி நேரம் பேசிய பிறகு, திருப்தியுடன்  நகர் திரும்பியிருக்கிறார். பிரதமருடன் பேசிய விவரங்களைக் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்து அவர்களுடன் ஆலோசனை கலந்த பிறகு முடிவைத் தெரிவிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீருக்குள், குறிப்பாகத் தலைநகர் ஸ்ரீ நகருக்குள் துணை நிலை ராணுவப் படைகளின் முகாம்களை மூடியும் அவர்களின் நடமாட்டத்தைக் குறைத்தும் மக்களுடைய கோரிக்கைகளை ஓரளவுக்கு பாஜக - பி.டி.பி. கூட்டணி அரசு அமல்படுத்தியது. இது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதும் எளிதான வேலை அல்ல. இதுவரை மத்தியில் ஆண்ட எந்த மத்திய அரசாலும் இவ்விரண்டையும் சாதிக்கவே முடிந்ததில்லை. பிரிவினை கோருவோரும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோரும் பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஊடுருவுவது உச்சத்துக்குச் சென்றபோது பிரச்சினை முற்றியது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் அது சற்றே தணிந்தது. அதன் பிறகு மத்தியில் 3 ஆட்சிகள் மாறி மாறி வந்துவிட்டன.

2000 தொடக்கத்தில் வாஜ்பாய் அரசு இரு நாடுகளின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகில் சிறு வணிகத்துக்கு அனுமதி தந்தது. மக்கள் தரை வழியாகப் போய்வரவும் பஸ், ரயில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பாகிஸ்தானுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் பிரிவினைவாதிகளை அரசே அழைத்துப் பேசியது. இதனால் காஷ்மீர் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டது.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக - பி.டி.பி. கூட்டணி அரசு ஏற்பட்டபோது, அதே போன்ற சுமுகமான சூழல் திரும்பும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விடுமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. இந்நிலையில், அரசியல் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு, காஷ்மீருக்குத் தேவைப்படும் உதவிகளை மெஹ்பூபா கேட்டுப்பெற வேண்டும். பி.டி.பி.யுடன் பேரம் நடத்த மத்தியில் உள்ள செல்வாக்கைக் காட்டி ஆதாயம் தேட பாஜக முற்படக் கூடாது. காஷ்மீர் போன்ற முக்கியமான மாநிலத்தில் அரசியல் நிலையற்ற தன்மை வெகு காலத்துக்கு நீடிப்பது நாட்டின் நலனுக்கு ஏற்றதல்ல. மோடி-மெஹ்பூபா சந்திப்புக்குப் பிறகு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் சிறிய ஒளிக்கீற்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in