Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்குமா காங்கிரஸ் செயற்குழு?

தேர்தல் ஜனநாயகத்தில் எப்போதுமே எதிர்க்கட்சிக்குத்தான் நாயக அந்தஸ்து. ஆனால், தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தன்னைக் குணச்சித்திரப் பாத்திரமாகவே சுருக்கிக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுலும் பிரியங்காவும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது ராகுலைக் காவல் துறை கையாண்ட விதம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்த ஆண்டு அக்டோபரில் லக்கிம்பூர் கெரி சம்பவம். வழக்கம்போல, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லச் சென்ற ராகுலும் பிரியங்காவும் தடுக்கப்பட்டு, அதுவும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. பிரியங்கா தங்கவைக்கப்பட்டிருந்த விடுதியில் அவர் தரையைச் சுத்தம்செய்யும் காட்சி, அனுதாபிகளிடையே வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. பிரியங்கா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, அக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. ஆனாலும்கூட, நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்களான ராகுலோ பிரியங்காவோ கட்சியைத் தலைமையேற்று நடத்துவதற்கு இன்னமும்கூடத் தயங்குகின்றனர். இந்திராவின் குடும்பத்தை அல்லாது வேறு யார் அக்கட்சியின் தலைமையை ஏற்றாலும் மூத்த தலைவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. ஒருவேளை, அக்குடும்பத்தை அல்லாது வேறொருவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரும் அக்குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார். இந்நிலையில், வருகிற சனிக் கிழமையன்று நடக்கவிருக்கும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சிக்கு நிரந்தரத் தலைவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தக் கூட்டத்திலும் தலைவர் யார் என்பது முடிவுசெய்யப்படவில்லை என்றால் ‘ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கக்கூட இயலாத காங்கிரஸால், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?’ என்பது போன்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலாது.

சனிக்கிழமைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலைப் பற்றி விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செயற்குழு உறுப்பினர்கள், மத்திய தேர்தல் குழு, நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் தேர்தலை நடத்த வேண்டும் என்பது மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் கூட்டாக முன்வைத்த கோரிக்கைகளில் ஒன்றாகும். ‘காங்கிரஸ் கட்சியில் முடிவெடுப்பது யார் என்று தெரியவில்லை’ என்பதாக கபில் சிபல் தெரிவித்த கருத்து அக்கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த உட்கட்சித் தேர்தலுக்கு நாள் குறிக்கப்படலாம். விரைவில் நடைபெறவிருக்கும் பஞ்சாப், உத்தராகண்ட், உத்தர பிரதேச மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம். ஆனால், அதைக் காட்டிலும் பஞ்சாப் முதல்வர் மாற்றம் உள்ளிட்ட உட்கட்சிப் பிரச்சினைகள்தான் முக்கிய விவாதப்பொருளாக இருக்கக்கூடும். பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்றிணைத்து, கட்சியை வலுப்படுத்திய பிறகுதான் எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை வகிக்கும் தகுதியை காங்கிரஸ் பெற முடியும். அது சாத்தியமில்லை என்றால், பாஜகவை எதிர்க்கும் மற்ற கட்சிகள் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு தங்களுக்குள்ளேயே கூட்டணி அமைக்கும் நிலைகூட வரலாம். தற்போதைக்கு, உறுதியான தலைமையை எதிர்பார்த்துத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x