Published : 12 Oct 2021 03:12 am

Updated : 12 Oct 2021 06:39 am

 

Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 06:39 AM

சென்னைக்கு வெளியிலும் ‘மூன்றாவது கண்’ திறக்கட்டும்

cctv-cameras-for-all-over-tn

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்டு, ஒரே நாளில் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகளிலிருந்து குழந்தையைக் கடத்தியவரை உடனடியாக அடையாளம் காண முடிந்தது. அதே மாவட்டத்தில், மருந்தகம் ஒன்றில் மருத்துவரின் பரிந்துரையின்றி தூக்க மாத்திரைகள் கேட்டு அரிவாளைக் காட்டிக் கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்களும் சிசிடிவி காட்சிப் பதிவுகளின் துணையோடு உடனடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றங்களையும் அக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும் கண்டறிவதில் சிசிடிவி காட்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. குற்றவாளிகளைக் கண்டறிய உதவுவதோடு குற்றம் நடந்ததற்கான சாட்சியமாகவும் விளங்குகின்றன. இந்நிலையில், சென்னை பெருநகரக் காவல் துறையால் ஓர் இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்ட ‘மூன்றாவது கண்’ தமிழ்நாடு முழுவதும் விரிவுபெற வேண்டியது அவசியம்.

சென்னை மாநகரத்தின் ஆணையராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்கினார். தன்னுடைய பணிக்காலத்தில் மாநகராட்சி எல்லைக்குள் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். இதன் உடனடி விளைவாக சங்கிலிப் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறித் திருட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டன. சிசிடிவி கேமரா கண்காணிப்பு, குற்றங்களைக் கண்டறிய உதவுகிறது என்பதோடு குற்றங்கள் நடக்காமல் இருக்கவும் உதவுகிறது. சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு உள்ள பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. சென்னையில் சிசிடிவி பொருத்துவதற்குக் காவல் துறை காட்டிவந்த தீவிர முனைப்பு கரோனா முன்தடுப்புப் பணிகளால் சற்றே குறைந்திருக்கிறது. மீண்டும் அது தீவிரம் பெற வேண்டும்.


சிசிடிவி கண்காணிப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரையில், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி அதனை முழுமையாகச் செயல்படுத்த முடியாது. அதற்கான செலவுகளைப் பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரையில், அந்தந்தப் பகுதிகளில் உள்ள வணிகர் சங்க அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆகியவையும் சிசிடிவி பொருத்துவதற்கான செலவுகளை ஏற்றுள்ளன. சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களிலும் இத்தகைய அமைப்புகளின் உதவியோடு ‘மூன்றாவது கண்’ இயக்கத்தை விரிவுபடுத்த முடியும். உள்ளாட்சி அமைப்புகளும் இதில் பங்கெடுக்கலாம். குற்றம் நடந்த பிறகு, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆராய்வது விசாரணையின் ஒரு பகுதியாகவே இன்று மாறிவிட்டது. அதே நேரத்தில், ஒவ்வொரு பகுதியிலும் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளைத் தொடர்ந்து கண்காணித்துவருவது குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் உதவும். சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதில் காட்டப்படும் வேகம், பழுதடைந்தவுடன் சரிசெய்வதிலும் காட்டப்பட வேண்டும்.
தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைCctv camerasசிசிடிவி காட்சிசிசிடிவி கேமராமூன்றாவது கண்குழந்தை கடத்தல்சிசிடிவி கண்காணிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x